தொடர் உச்சத்திலேயே வர்த்தகமாகி வந்த ஆபரணத் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. தவிர, தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதற்கிடையே, நடப்பாண்டில் தங்கம் விலை ஒரு சவரன் ஒன்றரை லட்சம் ரூபாயை எட்டும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சர்வதேச காரணிகளே தங்கம், வெள்ளி விலையை தீர்மானிக்கின்றன. எப்போதெல்லாம் சர்வதேச அளவில் அரசியல் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகிறதோ, அப்போதெல்லாம் தங்கம் விலை உயர்வது வழக்கம். முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைப் பாதுகாக்க தங்கத்தில் முதலீடு செய்வதால், அதற்கான தேவை அதிகரித்து விலை உயர்கிறது. வெள்ளி பெரும்பாலும் தொழில் பயன்பாட்டுக்கானது. மின்வாகனம், சோலார் பேனல் தயாரிப்புகளால் வெள்ளிக்கான தேவை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை வேகமாக உயர்வதால், முதலீட்டாளர்கள் தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளியில் முதலீடு செய்யும் போக்கும் உருவாகியுள்ளது.
அந்த வகையில், தொடர் உச்சத்திலேயே வர்த்தகமாகி வந்த ஆபரணத் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த மாதம் 29ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டியது. இந்த விலை உயர்வு மேலும் அதிகமாகும் என பரபரப்பாக பேசப்பட்ட சூழலில், கடந்த 2-3 நாட்களாக மேலும் மேலும் விலை குறைந்து வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை இன்று மேலும் அதிரடியாக குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே, நடப்பாண்டில் தங்கம் விலை ஒரு சவரன் ஒன்றரை லட்சம் ரூபாயை எட்டும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். டாலர் சார்பைக் குறைக்க சீனா, போலந்து போன்ற நாடுகளின் மத்திய வங்கிகள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 60 மெட்ரிக் டன் தங்கத்தை வாங்குகின்றன. இதனால் உலகளவில் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை உயரும் சூழல் உருவாகியுள்ளது. உலக தங்க கவுன்சிலின் தரவுகளின்படி 2025இல் கோல்டு இடிஎப்களில் 8 லட்சத்து 10ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எடை அளவில் பார்த்தால் சுமார் 801 டன் தங்கம் இடிஎப்களில் சேர்க்கப்பட்டுள்ளது.