சீமான், பெரியார் pt web
தமிழ்நாடு

“மிகைப்படுத்தி பேசுபவர்தான் சீமான்; பெரியார் எதிர்ப்பது இதனால்தான்” முன்னாள் நாதகவினர் சொல்வதென்ன?

”மேதகு பிரபாகரனை சீமான் சந்தித்தது உண்மைதான். அதில், மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், சீமான் கொஞ்சம் மிகைப்படுத்தலோடு சொல்கிறார்” - பேராசிரியர் அருள் இனியன்

அங்கேஷ்வர்

சீமான் சந்தித்தது உண்மைதான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்தான் எங்கும் பேசுபொருளாக இருக்கிறார். இது பெரியார் மண் இல்லை என சீமான் பேசுவதும் அதற்கு தொடர்ச்சியாக எதிர்வினைகள் வருவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இதனிடையே நாதகவில் இருந்து பலரும் விலகுவதாக வரும் அறிவிப்புகள் வேறு செய்திகளாகின்றன.

இந்நிலையில், தற்போதைய சீமானின் நடவடிக்கைகள் குறித்து அவருடன் முந்தைய காலத்தில் பயணித்தவர்களுடன் பேசினோம்.

சீமான் - பெரியார்

முதலில் தமிழர் நாட்டுக் கட்சித் தலைவர் பேராசிரியர் அருள் இனியனைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறியதாவது, “மேதகு பிரபாகரனை சீமான் சந்தித்தது உண்மைதான். அதில், மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், சீமான் கொஞ்சம் மிகைப்படுத்தலோடு சொல்கிறார். சினிமாவில் இருந்து வந்தது காரணமாக இருக்கலாம். அந்த மிகைப்படுத்துதல் தான் இங்கு விமர்சனத்திற்கு உள்ளாகிறது. அவர் தலைவர் பிரபாகரனை சந்திக்கவே இல்லை என்பதை இங்கு யாராலும் நிரூபிக்க முடியாது. பெரியாரிய இயக்கங்கள் சந்திக்கவே இல்லை என்பதைத்தான் நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்.

பெரியாரைத் தொட்ட பின் ஏன் பேசுகிறீர்கள்

ஒருகாலத்தில், நாம் தமிழர் கட்சிக்குள் இருந்து பெரியாரை விமர்சித்தவர்களை சீமான் வெளியேற்றியுள்ளார். ஆனால், இப்போது அவர் பெரியாரை எதிர்க்கும் நிலைப்பாட்டை நோக்கி தள்ளப்பட்டுள்ளார். விஜய் தமிழ்தேசிய கொள்கையையும், பெரியாரையும் ஏற்கிறேன் என சொன்னதால் சீமான் இந்த முடிவுக்கு வந்துள்ளார் என்பது என் அனுமானம். எல்லோரும் பேசும் விஷயத்தையே நானும் பேசுகிறேன் என்றால் எனக்கான தனித்துவம் இல்லாமல் போய்விடும்தானே?

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என பெரியார் தன் இறுதிக் கூட்டங்களில் பேசியதாக இப்போது பெரியாரிய இயக்கங்கள் சொல்கின்றன. பின் எதற்கு இத்தனை திராவிட இயக்கங்கள் என்ற கேள்வி உருவாகிறதுதானே? ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற கோரிக்கையை வைத்தே நீங்களும் நகர வேண்டியதுதானே? விடுதலை இதழின் தலைமை அச்சகத்தில் பெரியார் இருக்கும்போது ‘தமிழ்நாடு தமிழருக்கே’ எழுதி வைத்ததை இப்போது ஏன் அடித்து வைத்திருக்கிறீர்கள். பெரியாரிய இயக்கங்களும் பொய்தானே சொல்கின்றன. பெரியாரைத் தொட்டப்பின் மட்டும் ஏன் இத்தனைபேர் வந்து பேசுகிறீர்கள்” எனத் தெரிவித்தார்.

சீமானிடம் இந்த பழக்கம் எப்போதும் உண்டு 

அடுத்ததாக நாம் தமிழர் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்து, தற்போது அதிலிருந்து விலகி தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் வெற்றிக்குமரனைத் தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது, “சீமான் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார். நான் பழகிய, எனக்குத் தெரிந்த போராளிகளிடம் கிடைத்த தகவல்களின் வரையில் சீமான் தலைவரைச் சந்தித்தது உண்மைதான். சீமான் எப்போதும் ஒரு விஷயத்தை சுவைபடச் சொல்ல வேண்டும் என்பதில் கொஞ்சம் கூடுதலாக சொல்லுவார். அதேபோல்தான் கொஞ்சம் கூடுதலாக சொல்லிவிட்டார். ஆனால், சந்தித்ததும், புகைப்படம் எடுத்ததும் உண்மைதான். சந்தோஷ் சொன்னதிலும் கிட்டத்தட்ட 90% உண்மைதான். மற்றவர்களுக்கு நடந்ததை தனக்கு நடந்ததாக பேசும் வழக்கம் சீமானிடம் எப்போதுமே உண்டு.

தற்போது பெரியாரைத் தீவிரமாக எதிர்ப்பது தேவையற்றது என நினைக்கிறேன். அரசியல் கட்சி நடத்துகிற ஒரு இயக்கத்தின் தலைவருக்கு இது தேவையில்லாத விவாதம். ஆரம்ப காலக்கட்டங்களில் பெரியாரின் கொள்கைதான் தனது கொள்கை என பயணித்தவர் அவர். அதன்பின், நான் படித்துவிட்டேன், பெரியாரை வழிகாட்டியாக மட்டும் ஏற்கிறேன் எனச் சொன்னார். இதுவரை எல்லோருக்கும் ஏற்புடையதுதான். ஆனால், இப்போதோ இது பெரியார் மண் இல்லை என்கிறார்.

பெரியார் நேற்றிரவு பொதுக்கூட்டமொன்றில் இதுபோன்ற கருத்துகளை பேசி இன்று காலை அதை எதிர்ப்பது போல் அல்ல இந்த விவகாரம். பெரியார் ஏதோ காலக்கட்டத்தில் பேசியுள்ளார். நீங்கள் எதிர்க்க வேண்டியது யாரை? பெரியார் கொள்கைகளை தூக்கி வரும் திராவிட இயக்கவாதிகளைத்தான் எதிர்க்க வேண்டும். பெரியாரை ஏன் இன்று குறை சொல்லுகிறீகள்.

சீமான் நினைப்பது தவறு

பெரியார் கொள்கை என சொல்லிக்கொண்டு தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்குபவர்களைத்தான் விமர்சிக்க வேண்டும். இப்போதைய அரசியல் சூழலில் இந்த விவாதம் தேவையற்றது. பெரியார் விமர்சனத்துக்கு உட்படாதவர் அல்ல. தேர்தலை சந்திக்கும் காலக்கட்டத்தில் இது சரியான நேரம் அல்ல. சீமான், எந்த இடத்திலும் மக்கள் தன்னைப்பற்றியே பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார். இது ஒரு நோய்தான்.

சீமான்

சீமானுக்கு களத்தில் என்ன நடக்கிறது என்பதெல்லாம் பெரிய அளவில் தெரியாது. அவருக்கு அருகில் பாஜக, ஆர்எஸ்எஸ் mind setல் இருப்பவர்கள் இருக்கின்றனர். அவர்கள் சொல்தைத்தான் அவர் கேட்கிறார். பெரியாரை பேசினால் மிகப்பெரிய அளவில் மக்கள் திரள் வரும் என பேசி சீமான் மனதினை மாற்றி வைத்துள்ளார்கள். இத்தனை நாள் பேசாதவர் இப்போது பேச வேண்டியது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.