கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே பெரும் துயரில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த நிலையில், கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கியிருக்கின்றனர். தொடர்ந்து, த.வெ.க பொதுச் செயலாளர் ஆனந்த், த.வெ.க இணை பொதுச் செயலாளர் CTR. நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் உள்ளிட்ட நான்கு த.வெ.க நிர்வாகிகள் மீது கரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக இவர்களின் மீது, "கொலையாகாத மரணம், மரணம் விளைவிக்கும் செயல் செய்தல், பிறர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், அரசு அதிகாரியின் உத்தரவை மதிக்காமல் இருத்தல், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல்" ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது, இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை (FIR) வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி முதல் தகவல் அறிக்கையில் இருக்கக்கூடிய முக்கிய தகவல்கள் குறித்து பார்க்கலாம்.
முதலாவதாக, காலை 09.00 மணிக்கு பல்வேறு தொலைக்காட்சிகளில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மதியம் 12.00 மணிக்கு கரூர் வர இருப்பதாக சொன்னதை தொடர்ந்து காலை 10.00 மணியிலிருந்தே பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் பெருமளவில் பரப்புரை மேற்கொள்ளப்போகும் இடத்திற்கு வர தொடங்கினார்கள்.
இரண்டாவதாக, கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கொடுத்த விண்ணப்பத்தில் 10,000 தொண்டர்கள்தான் வருவார்கள் என்று எழுதி கொடுத்துள்ளனர். ஆனால், பிரச்சாரக் கூட்டத்திற்கு சுமார் 25000 க்கும் மேற்பட்டோர் வந்தனர். இந்நிலையில், மாலை 04.45 மணிக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம் வழியாக நுழைந்து, வேண்டுமென்றே காலதாமதம் செய்து, அனுமதி இல்லாமல் ரோட்ஷோவை பல்வேறு இடங்களில் நடத்தி போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தி அதிக இடங்களில் நிபந்தனைகளை மீறியும், வரவேற்புகள் நடத்தியும் காலதாமதம் செய்தாத FIR ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவதாக, கூட்ட நெரிசலால் அசாதாரண சூழல் ஏற்பட்டு மூச்சு திணறல், கொடுங்காயம், உயிர் சேதம் ஏற்படும் என தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணைச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோரிடம் பலமுறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை எனவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
பின்னர், "நீண்ட நேர காத்திருப்பு போதுமான தண்ணீர் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல், அதிக கூட்டம் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் மக்களின் உடல்நிலையில் சோர்வடைவு ஏற்பட்டது. இதன் விளைவாக மேற்படி சம்பவத்தில் அதிகளவில் மிதிபடுதல் ஏற்பட்டு அதனால் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். மேலும், பலருக்கு காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்." எனவும் இந்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரூர் நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் மணிவண்ணன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.