செய்தியாளர்கள் ஸ்ரீதர் மற்றும் காமராஜ்
ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழை காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. 3 மாவட்டங்களிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. நியாய விலைக் கடை மூலம் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், நிவாரணத் தொகை விநியோகம் சீராக இல்லை என்றும் சில இடங்களில் மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் கீழ்அருங்கோணம், பாலூர், எய்தனூர், சுந்தரவாண்டி உள்ளிட்ட 12 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள், முறையாக நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி கடலூர் - பண்ருட்டி சாலையில் ஏற்கனவே மறியலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தனர். ஆனால், தற்போதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் மீண்டும் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல், விழுப்புரம் மாவட்டத்திலும் சாலை மறியல் நடைபெற்றது. திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டோர், ஓமந்தூர், உப்புவேலூர், கிளியனூர், அருவப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் புயல் பாதிப்பிற்கான நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியலில் ஈடுபட்டவர்களுடன் முதலில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். விரைவாக நிவாரணம் வழங்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.