காரைக்குடி: “அவர்களை விளம்பரப்படுத்த எங்களை குறைத்து பேசுவதா?”- தீபக், விஜய் சேதுபதி மீது புகார்!
செய்தியாளர் நாசர்
உலகப் புகழ் பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ் குறித்து தவறாக விமர்சனம் செய்ததாக பிக் பாஸ் போட்டியின் பங்கேற்பாளர், நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காரைக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆத்தங்குடி டைல்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கொடுத்த புகாரில், “எங்களது உலகப் புகழ்பெற்ற தயாரிப்பான ஆத்தங்குடி டைல்ஸ் தரத்தை குறைத்து மதிப்பிட்டு, KAG என்ற நிறுவனத்தின் டைல்ஸ்க்கு விளம்பரம் தேடுவது போல் கடந்த 14 ஆம் தேதி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் தீபக் என்பவர் பேசியுள்ளார்.
இது உலகப் புகழ் பெற்ற எங்களது தயாரிப்பான ஆத்தங்குடி டைல்ஸின் மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்துவது போல் உள்ளது. எனவே இதுகுறித்து விமர்சனம் செய்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர் தீபக், நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைக்காட்சி, மற்றும் அதன் தொகுப்பாளர் விஜய் சேதுபதி ஆகிய மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இது குறித்து கூறிய காவல் கண்காணிப்பாளர் பார்த்தீபன் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு பின் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.