யானை
யானை கோப்புப்படம்
தமிழ்நாடு

ஈரோடு | தண்ணீர் தேடிச் சென்று குழியில் விழுந்த பெண் யானை; நீண்ட போராட்டத்திற்கு பின் நேர்ந்த துயரம்!

PT WEB

செய்தியாளர் - D.சாம்ராஜ்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூரில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வாழ்ந்து வருகின்றன. அந்த வனப்பகுதியில் தற்போது கோடைக்காலம் என்பதால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் குளம், குட்டைகளில் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. யானைகள் யாவும் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமத்துக்குள் நுழைகின்றன. அப்படி கடம்பூர் வனச்சரகம் குரும்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பெண் யானை ஒன்று மொசல்மடுவு பகுதியில் தண்ணீர் தேடி சுற்றித்திரிந்துள்ளது.

அப்போது அப்பகுதியில் உள்ள பழனிச்சாமி என்பவரின் தோட்டத்தில் உள்ள குழியில் இருந்து மேலே ஏறும்போது யானை தவறிவிழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த யானை, உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினர், யானையை மீட்டு அதற்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர்.

உயிரிழந்த யானை

யானையின் உடல்நிலையை சோதித்த பின்னர் அதற்கேற்ப உணவு மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து, யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.