திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கணக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி பழனிசாமி. பழனிச்சாமியின் மனைவி விஜயா மற்றும் மகன் நல்லசாமி ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். வீட்டில் மகள் தனலட்சுமி மற்றும் தந்தை பழனிச்சாமி இருவரும் மட்டும் இருந்துள்ளனர்.
மகள் தனலட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் தந்தை பழனிச்சாமி மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த பழனிச்சாமி, தனலட்சுமி உடலுக்கு இறுதி சடங்குகளை செய்துள்ளார். பின்னர் பழனிச்சாமியும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பழனிச்சாமியின் மனைவி விஜயா திருச்சந்தூரில் இருந்து மகள் மற்றும் கணவனை செல்போனின் தொடர்பு கொண்ட போது இருவரும் செல்போனை எடுத்து பேசாததால் சந்தேகம் அடைந்து அருகில் இருந்தவர்களை வீட்டில் சென்று பார்க்கக் கூறியுள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டிக்கொண்டு திறக்க முடியாதபடி இருந்துள்ளது. சந்தேகம் அடைந்து ஆயக்குடி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசார் வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தனலட்சுமி மற்றும் பழனிச்சாமி இருவரும் வீட்டில் பிணமாக கிடந்தனர். இருவரின் உடலையும் மீட்ட போலீசார் பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் மகளின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்த பழனிச்சாமி மகளைக் கழுத்தை நெரித்து கொன்றதும், பின்னர் மகளின் உடலுக்கு இறுதி சடங்குகளை செய்து வட்டு பழனிச்சாமியும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.