தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த வாரம் தனது பரப்புரை பயணத்தைத் தொடங்கினார். வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை சனிக்கிழமை தோறும் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பரப்புரையை முடித்த அவர், அடுத்ததாக நாகையிலும் திருவாரூரிலும் நேற்று தனது பரப்புரையை முடித்திருக்கிறார். இந்நிலையில்தான், நாகையில் விஜய் பேசியது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. விஜய் பேசியதில் சிலவற்றை குறித்து அவை தவறான தகவல்கள் என தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பகம் செய்தி வெளியிட்டிருந்தது. இருப்பினும் உண்மை சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள செய்திகளிலும் உண்மை இல்லை என கருத்துக்கள் எழுந்துள்ளன. விஜய் பேசியது என்ன அது தொடர்பாக நடக்கும் விவாதங்கள் என்ன என்று விரிவாகப் பார்க்கலாம்.
நாகையில் செப்டம்பர் 20 ஆம் தேதி தனது பரப்புரையின்போது பேசிய விஜய், ஆளும் கட்சியான திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். குறிப்பாக நாகப்பட்டினத்தில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பது குறித்து பட்டியலிட்டுப் பேசினார். அதில் நாகப்பட்டினத்தில் அதிகமாக இருக்கும் அலையாத்தி காடுகளை பாதுகாக்க அரசு தவறிவிட்டது என்றும் அதனைப் பாதுகாக்க வேண்டும் எனவும் பேசியிருந்தார். அதேபோல அரசு கடல்வளக் கல்லூரியை நாகப்பட்டினத்தில் கொண்டு வந்திருக்கலாம்.. ஆனால், அதையும் செய்ய திமுக அரசு தவறிவிட்டது எனக் கூறியிருந்தார். அதேபோலதான் தனக்கு பரப்புரை மேற்கொள்ள இத்தனை கட்டுப்பாடுகளை விதிப்பது போல ஆர்.எஸ்.எஸ் தலைவர்களோ, மோடியோ அமித் ஷாவோ தமிழ்நாட்டிற்கு வந்தால் அவர்கள் பங்கேற்கும் கூட்டங்களுக்கு இப்படித்தான் கட்டுப்பாடுகள் விதிப்பீர்களா என நேரடியாக திமுகவை விமர்சித்துப் பேசியிருந்தார்.
தவெக தலைவர் விஜய் வைத்துள்ள குற்றச்சாட்டுகளில் சிலவற்றின் தகவல்கள் தவறானவை என்று தமிழ்நாட்டின் தகவல் சரிபார்ப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 45 சதுர கிலோமீட்டராக இருந்த அலையாத்தி காடுகள், அரசின் முயற்சியால் இரண்டு மடங்காக உயர்ந்து, இன்று 90 சதுர கிலோ மீட்டராக இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல நாகப்பட்டினம் மாவட்டத்தில் 586 ஹெக்டேர் நிலப்பரப்பிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 521 ஹெக்டேர் நிலப்பரப்பிலும், சதுப்புநில காடுகள் அமைந்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு நாகையில் கடல்சார் கல்லூரி இல்லை என்ற விஜய் பேசியிருந்த நிலையில், அங்கு தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் இருப்பதாக, தகவல் சரிபார்ப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ தமிழ்நாடு வரும்போது நிபந்தனை விதிப்பீர்களா என விஜய் பேசியிருந்த நிலையில், கடந்தாண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற்ற பிரதமரின் பேரணிக்கு, காவல் துறை 20 நிபந்தனைகளை விதித்திருந்ததாகவும் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர். நாகை அக்கரைப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காடுகள் அழிந்து வருவதும்.. அந்த மரங்களை பலர் விறகுக்காக வெட்டி வருவதும் தொடர் பிரச்சனை. அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் 2022 லிருந்தே கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். அதைத்தான் விஜய் சுட்டிக்காட்டியிருக்கிறார் எனவும் மீன்வளக் கல்லூரிதான் உள்ளது கடல்வளக் கல்லூரி இல்லை அதற்காகத்தான் கடல்வளக் கல்லூரி வேண்டும் என விஜய் பேசியிருக்கிறார் எனவும் விஜயின் பேச்சை தகவல் சரிபார்ப்பகம் தவறாகப் புரிந்துகொண்டு இப்படி அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.