மின் வெட்டைக் குறிப்பிடும் விஜய்.. களத்தில் நடந்தது என்ன? வெளியான மனுவும் கசிந்த தகவலும்!
நாகையில் பரப்புரை செய்த விஜய், பரப்புரை செய்த இடங்களில் மின் வெட்டு ஏற்பட்டதை குறிப்பிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்டு பேசினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நாகையில் மின்வாரியத்திற்கு தவெக மாவட்டச் செயலாளர் கொடுத்த மனு பேசுபொருளாக மாறியுள்ளது. நாகையில் மின்வாரியத்திடம் தவெக கேட்டது என்ன? திருச்சி, அரியலூரில் விஜய் பரப்புரை செய்தபோது நடந்தது என்ன? விரிவாக பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழ்நாடு தழுவிய அளவில் சுற்றுப்பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். முன்னதாக, செப்டம்பர் 13ம் தேதி திருச்சி, அரியலூரில் மக்கள் சந்திப்பை நடத்திய விஜய், நேற்று நாகை மற்றும் திருவாரூரில் பரப்புரை செய்தார். நடந்து முடிந்த நான்கு மாவட்டங்களிலும், அதிகளவில் கூட்டம் கூடிய நிலையில், பரப்புரையின் முதல் இடமான திருச்சியில் விஜய் பேசியபோது மைக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு விவாதப்பொருளாக மாறியது.
இந்த நிலையில், நாகையில் நேற்று பேசிய விஜய் திருச்சி மற்றும் அரியலூரில் ஏற்பட்ட பிரச்னை குறித்து பேசினார். அப்போது, அரியலூருக்கு செல்லும்போது அந்த பகுதியில் Power cut, திருச்சிக்கு போனபோது பேசுகையில் ஸ்பீக்கர் வயர் Cut ஆனது.. ஒன்றிய அரசு சார்பில் பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ வரும்பொழுது இதே போன்று Power cut செய்வீர்களா? நிபந்தனைகள் விதிப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையில், நாகையில் விஜய் பரப்புரையின்போது மின்வாரியத்திற்கு தவெக மாவட்டச் செயலாளர் அளித்த மனுவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த நேரத்தில், திருச்சி மற்றும் அரியலூரில் நடந்தது என்ன? நாகையில் விஜய் முரணாக பேசினாரா என்று விசாரித்தோம். அதன்படி, திருச்சியில் செப்டம்பர் 13ம் தேதி விஜய் பரப்புரை செய்ய வந்தபோது மின் தடை ஏற்பட்டுள்ளது. முறையான முன் அறிவிப்பு இல்லாமல் ஏற்பட்ட அந்த திடீர் மின் தடையால், அங்கு பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரம், அரியலூர் பரப்புரையின்போதும் மின் தடை ஏற்பட்டது. இப்படியாக முன் அறிவிப்பு இல்லாமல் மின் தடை ஏற்பட்ட நிலையில், அதை சுட்டிக்காட்டியே விஜய் பேசினார் என்கின்றனர் தவெக தரப்பினர். ஆனால், நாகையை பொறுத்தவரை, விஜய் உரையாற்ற வரும் வழித்தடத்தில் உயர் மின்னழுத்த கம்பி இருப்பதால், விஜய்யின் நிகழ்வு தொடங்கி முடியும் வரை அவ்வழியில் உள்ள வழி தடங்களில் மின் நிறுத்தம் அல்லது மின் ஊழியர்களை நியமித்து பொதுமக்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கடிதமே நாகையில் விஜய்யின் குற்றச்சாட்டின்போது அவருக்கு எதிராக பரப்பப்பட்டு வருகிறது.
விஜய்யின் சுற்றுப்பயண நிகழ்வை பொறுத்தவரை, அதிக கூட்டம் கூடுகையில் விபரீதங்கள் ஏதும் ஏற்படாத வகையில், அங்கு வரும் தவெக தொண்டர்கள், பொதுமக்கள் பொறுப்புணர்வோடு, பாதுகாப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்