காஸா போர்
காஸா போர் pt web

PT EXPLAINER | பட்டினியில் சுருங்கும் நாடு..சொந்த நாட்டிலேயே அகதிகளாக மக்கள்|Gaza|Israel

இஸ்ரேல் மற்றும் காஸாவிற்கு இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஐநா சபையின் விசாரணை ஆணையம் காஸாவில் நடப்பது இனப்படுகொலை என தெரிவித்துள்ளது.
Published on

றஓடி விளையாடிய நிலம் சொந்தமில்லை; படுத்துறங்கி, உண்டு களித்து பொழுது போக்கிய இடம் நிரந்தரமில்லை; பிறந்த மண்ணே உரிமையானதில்லை என்பது எத்தனை வலி மிகுந்த வாழ்க்கை... சொந்த நாட்டிலேயே அகதியாக்கப்படுவதன் துயரத்தை விட வாழ்வில் கனம் தருவது பிறிதொன்றில்லை. அந்த துயரம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு இனமே பசியோடும், வறுமையோடும் அடுத்த கணம் உயிர் பிழைத்திருப்பதன் நிச்சயமின்மையோடும் ஓடிக் கொண்டிருக்கிறது.

காஸா
காஸா முகநூல்

கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு குழந்தை, குட்டிகளுடன் நடந்து கொண்டே இருக்கிறார்கள். நடந்து கடந்துவிடக்கூடிய தொலைவு இல்லை. ஆனால் கடக்காவிட்டால் உயிர் நிச்சயமல்ல. காரணம், காசாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் படைகள் விரட்டிக் கொண்டிருக்கின்றன. காசாவில், வான் வழியே பறந்து வரும் காகிதத் துண்டுகளை ஆர்வத்துடன் பாலஸ்தீன சிறுவர், சிறுமியர் பிடிக்கிறார்கள். அதில் இருப்பதோ எச்சரிக்கை வாசகம்தான், "உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறிவிடுங்கள்.. மனிதாபிமான பிராந்தியமாக அறிவிக்கப்பட்டுள்ள தெற்கு பகுதிக்கு சென்று விடுங்கள்".

இந்த எச்சரிக்கைக்குப் பின்னும் அங்கிருந்தால் என்ன நிகழும் என்று அவர்களுக்குத் தெரியும். இஸ்ரேலின் குண்டு மழைக்கு இரையாவதை விட எங்கோ உயிர் பிழைக்கலாம் என்ற எண்ணத்தில் கையில் கிடைத்த பொருட்களுடன் குழந்தைகளை சுமந்தபடி அச்சத்துடன் மக்கள் வெளியேறுகிறார்கள்.

காஸா போர்
H1B விசா| 24 மணி நேரத்தில் அமெரிக்கா திரும்ப அறிவுறுத்தல்... வெள்ளை மாளிகை சொல்வது என்ன ?

காசாவில் இருந்து பாலஸ்தீனர்கள் வெளியேறுவதற்கு அல் ரஷீத் என்ற கடலோர சாலை மட்டுமே இஸ்ரேலால் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பது ஒரே வழி என்பதால் அங்கு கடும் நெருக்கடியில் வாகனங்களும் மக்களும் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கார்கள், தள்ளுவண்டிகள், டிரக்குகள், சைக்கிள்கள் என கிடைத்த வாகனங்களில் தங்கள் பொருட்களையும், கூடாரத்துணிகளையும் எடுத்துக் கொண்டு மத்திய பகுதியில் இருந்து தெற்கு நோக்கி மக்கள் படைபடையாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். வழியில் சாலையோரத்தில்தான் படுத்துறங்க வேண்டும். கடுமையான பனி. பட்டினியால் சுருங்கிய வயிறு. எங்கு செல்வது என்று தெரியாமல், இருக்கும் இடத்தில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துடன் இவர்கள் பயணப்படுகிறார்கள். விரக்தி, வெறுமை, கோபத்துடன் நகர்ந்து செல்லும் மக்களில் ஒருவர்,11 ஆவது முறையாக தாங்கள் இதுபோன்று வெளியேற்றத்துக்கு ஆளாவதாக வேதனையுடன் கூறுகிறார்.

காஸா
காஸாpt web

முடிந்தவரை தங்கியிருக்கலாம் என்று தங்கள் இடத்தில் இருந்தால், அங்கு இஸ்ரேலின் குண்டுகள் துளைக்கின்றன. இரவு நேரங்களில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை நரகம் என்கிறார்கள் பாலஸ்தீனர்கள். அடுக்குமாடி கட்டடங்கள் இஸ்ரேலின் குண்டுகளால் தகர்த்து தரைமட்டமாக்கப்படுகின்றன. தப்பி உயிர் பிழைத்தவர்களின் நெஞ்சங்கள் படபடத்துக் கொண்டிருக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே இவர்களின் ஓட்டங்கள் தொடர்கின்றன. குடும்பங்களுக்கான தனிமை என்று எதுவும் இல்லை, கிடைக்கும் இடத்தில் கூடாரம் அமைத்து குடும்பத்துடன் தங்கிக்கொள்கிறார்கள். தினசரி உணவைத் தேடுவதும்,தண்ணீரைத் தேடுவதுமாக இவர்களின் பொழுதுகள் கழிகின்றன. இரவு கவிழ்ந்தால், விடியும்வரை உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற நிலையே இருக்கிறது.

ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழித்தொழிக்க தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், காசாவில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் மக்களால், அல் ரஷீத் சாலையில் நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது, இதனால் கூடுதல் பாதையில் 48 மணிநேரத்தில் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் கெடு விதித்துள்ளது.

 ஓய்வுபெற்ற ஐ.நா அதிகாரி கண்ணன்.
ஓய்வுபெற்ற ஐ.நா அதிகாரி கண்ணன்.pt web

காஸா என்பதே ஒரு மிகச்சிறிய இடம். கிட்டத்தட்ட 360 சதுர கிலோ மீட்டர் கொண்ட இடம். அதில் 23 பாலஸ்தீனியர்கள் வசிக்கிறார்கள். காஸா நகரத்தில் மட்டும் 10 லட்சம் பேர் இருக்கிறார்கள். தீவிரவாதிகள் என இஸ்ரேல் கருதும் அந்த, 10 லட்சம் பேரை தெற்குக்கு அனுப்புவதற்கு இந்த ஆப்பரேசன் நடத்தப்படுகிறது என கூறுகிறார் ஓய்வுபெற்ற ஐ.நா அதிகாரி கண்ணன்.

காஸா போர்
”பாகிஸ்தானுடன் பேசும் அரசால், சொந்த மக்களுடன் பேச முடியாதா..?” - ரேவந்த் ரெட்டி கேள்வி

தற்போது வரையில், காசாவில் இருந்து 70 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து தெற்கு நோக்கி சென்றுள்ளனர். கடந்த மாதத்தில் ஒன்றரை லட்சம் பேர் வெளியேறியுள்ளனர். தெற்கு பகுதியில் Al-Mawasi மற்றும் அதனை சுற்றியு பகுதிகள் மனிதாபிமான பிராந்தியமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இடம்முழுவதும் தற்காலிக டெண்ட்டுகள் கடல் போல காட்சியளிக்கின்றன. ஏற்கனவே அங்கு ஆயிரக்கணக்கானோர் வசிக்கும் நிலையில் காசா முழுவதும்இருந்து வரும் மக்களும் இந்த இடத்தை நோக்கியே தள்ளப்படுகின்றனர். இந்த பாதுகாக்கப்பட்ட பகுதியில் இதுவரை 8 லட்சத்துக்கும்அதிகமானோர் குவிந்துள்ளனர். ஆனால் இந்த பகுதியிலும் இஸ்ரேல் 109 தாக்குதல்களை நடத்தியதில் 2 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். சொந்த மண்ணிலேயே அகதிகளாகவும், புலம் பெயர்தலையும் சந்தித்துக் கொண்டிருக்கும் இவர்களின் நிலை கண்டு இஸ்ரேல் மனமிறங்கவில்லை.

பேராசிரியர் கிளாட்சன்
பேராசிரியர் கிளாட்சன்pt web

காஸா மக்கள் தொன்றுதொட்டு அங்கு வாழ்ந்து வருபவர்கள். அவர்களை மதத்தின் பெயராலயோ, நம்பிக்கையின் பெயராலயோ, தீவிரவாதத்தில் பெயராலயோ அவர்களை வெளியேற்றுவது என்பது ஞாயமற்ற விஷயம். சொந்த ஊரில் அகதியாக்கப்படுதல், வீடற்றவர்களாக மாற்றுதல், நிலமற்றவர்களாக மாற்றுதல் அதற்குமேல் நாடற்றவர்களாக மாற்றுதல். ஒரு அகதி வாழ்க்கையை இவர்களின் மீது திணிப்பது என்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் எனக் கூறுகிறார் பேராசிரியர் கிளாட்சன்.

ஹமாஸ் அழிப்பு என்ற பெயரில் இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை என்று அறிவித்திருக்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.. கடந்த 16 ஆம்தேதி ஐநாவின் விசாரணை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை நிகழ்த்துவதாக கூறியுள்ளது. ஒருதேசத்தினரை, இனத்தை, மதத்தினரை, ஒரு நாட்டை முழுமையாகவோ, பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஐநா விசாரணை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதியில் ஐநாவின் விசாரணை ஆணையம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் 72 பக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சுதந்திரமான இந்த விசாரணை ஆணையத்தின் தலைவர் நவி பிள்ளை இனப்படுகொலை குறித்தும், இனப்படுகொலையை தடுக்கத்தவறியவர்களாக குறிப்பிட்டுள்ளார்.

நவி பிள்ளை, தலைவர், விசாரணை ஆணையம், ஐ.நா
நவி பிள்ளை, தலைவர், விசாரணை ஆணையம், ஐ.நாpt web

ஓய்வுப்பெற்ற ஐநா அதிகாரி, கண்ணன் இந்த அறிக்கை குறித்து பேசும்போது,” இந்த அறிக்கையை வரவேற்கிறேன். இந்த அறிக்கை ஐநா சபையின் தார்மீக அடிப்படியில் உயர்வாக கருதப்படுகிற அம்மையாரின் தலைமையில் அமைந்த குழு இந்த அறிக்கையை தந்திருக்கிறார்கள். இந்த குழுவில் மிலூன் கோத்தாரி என்ற ஒரு இந்தியரும் இடம்பெற்றுள்ளார். இந்த அறிக்கை இஸ்ரேலை கொஞ்சம் நிதானப்படுத்தும். பாலஸ்தீனர்களின் இன்னல்களை நீக்கும் என்று நாமெல்லாம் நம்புகிறோம். ஆனால், அது நடக்குமா என்பது நமக்கு தெரியாது. இந்த போர் ஏன் இன்னும் நடக்கிறது என்று நான் எண்ணிப்பார்த்தால் என்னால் இரண்டு காரணங்களை சொல்ல முடியும். இந்த இஸ்ரேலியர்கள் ஹமாஸை நிர்மூலமாக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.

காஸா போர்
காஸா போர் நிறுத்த தீர்மானம்.. அமெரிக்காவால் தோல்வி.. வீட்டோ அதிகாரம் என்றால் என்ன?

ஆனால், ஹமாஸோ இஸ்ரேலின் இருப்பையோ ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களும் ஆயுதத்தை கீழே போட தயாராக இல்லை. இது ஒரு காரணம். இரண்டாவது, இன்னும் 48 பிணைக்கைதிகளை விடுவிக்காமல் இருக்கிறார்கள். அதில், 20 பேர் உயிருடன் இருப்பதாக அறியப்படுகிறது. அவர்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தால் போர் நடப்பதற்கான காரணங்களில் ஒன்று குறையலாம். இந்த போர் நிறுத்துவது ஒருவரின் கையில்தான் உள்ளது. ஆனால் அவரோ அமைதியாக இருக்கிறார். அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் சென்ற போது ஹமாஸை மிருகங்கள் எனக்கூறி இருக்கிறார்" என்று பேசினார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுஎக்ஸ்

தொடர்ந்து, இஸ்ரேல் தரப்பினர், தங்கள் தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்றும் விசாரணை ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இனப்படுகொலையை நிறுத்திக்கொள்ள வேண்டும், காசாவில் சர்வதேச மனிதாபிமான உதவிகள் கிடைக்கும் வகையில் தடுப்புகளை அகற்ற வேண்டும் என்றும் இஸ்ரேல் அரசை, ஐநா ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

ஐநாவின் இந்த அறிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார். இனப்படுகொலை அறிக்கை என்பது முறைகேடானது,போலி என்றும், ஹமாஸ் பின்புலத்தினரால் பின்னப்பட்ட அறிக்கை என்றும் ஐநாவுக்கான இஸ்ரேல் துதர் டேனியல் மெரோன் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள விசாரணை ஆணையத்தலைவர் நவி பிள்ளை, இந்த அறிக்கையில் உள்ள தரவுகளில் எது தவறு என்பதை குறிப்பிட வேண்டும்என்று இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார். அல்லது தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஐநா உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் மற்றும் பொதுச்செயலாளர் ஆண்டோனிய குட்ரஸ் ஆகியோர் இந்த அறிக்கையை படித்துவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஐநா சபை
ஐநா சபைpt web

ஜெர்மனியில் நாஜிக்களால், யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டதையடுத்து1948 ஆம் ஆண்டு U.N. Genocide Convention, இனப்படுகொலை என்றால் என்ன என்பதற்கு ஒரு வரையறை வகுத்தது. இதன்படி, " முழுமையாகவோ ஒரு பகுதியாகவோ, ஒரு தேசத்தினரை, சமூகத்தினரை, இனத்தவரை, அல்லது மதக்குழுவினரை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் செயல்படுவது இனப்படுகொலை என்று வரையறுக்கப்பட்டது. ஐந்தில் ஒரு குற்றமாவது இழைக்கப்பட்டிருந்தால் அதனை இனப்படுகொலையாக வரையறுக்கலாம் என்று ஐநா தெரிவித்தது.

காஸா போர்
Israel போட்ட உத்தரவு... Gaza-வில் நடக்கும் கொடூரம்..!

படுகொலை, உடல் அளவிலும், மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துவது, பாலஸ்தீனர்களை முழுமையாகவோ, பகுதியாகவோ அழிக்கும் நோக்கம், குழந்தைப்பிறப்பை கட்டுப்படுத்த நெருக்கடிகள் ஏற்படுத்துவது ஆகிய குற்றங்களை காசாவில் இஸ்ரேல் இழைத்துள்ளதாக விசாரணை ஆணையம் கூறியுள்ளது. 83 வயதாகும் நவி பிள்ளை, 1994 ஆம் ஆண்டு ரூவாண்டாவில் பத்து லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டது பற்றிய ஐநா விசாரணை ஆணையத்துக்கு தலைமை வகித்தவர். அதுபோன்ற நிலைதான் காசாவிலும்இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

காஸா
காஸாமுகநூல்

இத்தனைக்கும் மத்தியில் காசாவின் வெளிப்புறப்பகுதிகளில் இருந்து இஸ்ரேல் தீவிரத்தாக்குதலை நடத்தியபடி மையப்பகுதி நோக்கி முன்னேறி வருகிறது. வான்வழித்தாக்குதல்களால் காசா துளைக்கப்படுவதால் அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாகி வருகின்றன. காசாவில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை ஹமாஸ் படையினர் இருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. கெரில்லா வகை தாக்குதலை நடத்திவரும் ஹமாஸ் அமைப்பினர், ராணுவ நிலைகள் மீது தாக்குதலை நடத்துவதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ஹேகில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில், ஏற்கனவே இஸ்ரேல் ஒரு இனப்படுகொலை வழக்கை எதிர்கொண்டுவருகிறது. 2024 அக்டோபர் 7 ஆம்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக காசா அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஒரு லட்சத்து 66 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். ஹமாஸ்அமைப்பினரை தோற்கடித்து, பிணைக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் வீரர்கள் வலிமையாக தாக்குதல் நடத்திவருவதாகவும், காசா பற்றியெரிவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

 Bezalel Smotrich
Bezalel Smotrichஎக்ஸ்

இந்த நிலையில் இஸ்ரேல் நிதிஅமைச்சர் Bezalel Smotrich டெல் அவிவ் நகரில் செய்தியாளர்களை சந்தித்தபோது வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காசா மீதான போருக்காக நிறைய பணம் செலவழிந்துவிட்டது என்றும், காசா இனி தங்களுக்கு ரியல் எஸ்டேட் புதையலாக கிடைத்துவிடும் என்றும் கூறியதுடன், அடுத்து எப்படி தொடர்வது என்பதை அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பேசிவருவதாக தெரிவித்தார். இப்போது இடிப்பு பணியில் இருப்பதாகவும், அடுத்து நகரப்பகுதியாக புத்துருவாக்கம் செய்யப்படும் என்று கூறினார் இஸ்ரேல் அமைச்சர்.

காஸா போர்
5 லட்சம் மக்கள் பாதிப்பு.. ’பஞ்ச’ நகரமான காஸா.. ஐ.நா. அறிவிப்பு.. நிராகரித்த இஸ்ரேல்!

ஒரு இனமே கொல்லப்பட்டு சொந்த மண்ணில் இருந்து விரட்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலின் மீது கூடுதல் வரிகளை விதிக்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இஸ்ரேலுக்கு நெருக்கடி தர நினைக்கிறது ஐரோப்பிய யூனியன். அண்மையில் கத்தாரில் நடந்த உச்சி மாநாட்டில் எதிரி எனக் குறிப்பிட்டுள்ளது எகிப்து. ஆனால் இந்த சர்வதேச அழுத்தங்கள் இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி தீர்வு தருமா என்பது நிச்சயமற்றதாகவே இருக்கிறது.

un warns of 14000 children could die in gaza in next 48 hours
காஸாராய்ட்டர்ஸ்

”இந்த காலத்தில் மக்கள் பட்டினியால் சாவதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். தொடர்ந்து உணவு கொடுக்கும் இடங்களில், உணவு வாங்க செல்பவர்களை சுட்டுக் கொல்வது, பெண்களை சுட்டுக் கொல்வது, குழந்தைகளை சுட்டுக்கொல்வது. அதவாது கொஞ்சம் கூட தீவிரவாதத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்களை அல்லது எல்லாரையும் தீவிரவாதி போல கருதி கூட்டு தண்டணை வழங்குவதை எந்த மதத்திலும், எந்த நீதிமன்றத்திலும் நியாயபடுத்த முடியாது. இந்த போரை நிறுத்துவது மற்றவர்களின் கையில் இருக்கிறதோ இல்லையோ முதலில், இஸ்ரேல் கையில் மட்டுமே இருக்கிறது” எனக்கூறுகிறார் பேராசிரியர் கிளாட்சன்.

இச்சூழலில் காஸா மீதான போரை நிறுத்த வேண்டும் என போராட்டம் நடந்து வருகிறது. போரை நிறுத்தி பிணைக்கைதிகள் மற்றும் ராணுவ வீரர்களை இஸ்ரேலுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் இஸ்ரேல் மக்கள் போராடி வருகின்றனர். இதற்கிடையே காஸாவில் நிரந்தர போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதனை அமெரிக்க தனது வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு நிராகரித்துள்ளது. இந்த தீர்மானம் ஹமாஸை கண்டிக்கவில்லை எனவும் கூறியுள்ளது.

un warns of 14000 children could die in gaza in next 48 hours
காஸாராய்ட்டரஸ்

காஸாவில் உணவுப்பற்றக்குறை கடுமையாக உள்ளது என்பதை கடந்த மாதம் ஐநா உணவுப் பாதுக்காப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர், காஸா நகரத்தில் 10,000 குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் பாலஸ்தீனர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கே செல்வார்கள், யார் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பார்கள் என்பது கேள்விக்குறி.

காஸா போர்
பட்டினியால் உயிரைவிடும் காஸா மக்கள்.. உணவுக்காக கேமராவை விற்பனை செய்யும் பத்திரிகையாளர்!

காஸா முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டுவிட்டால் அந்தப் போர்க்குற்றத்தின் சாட்சிகளாக மட்டுமல்ல இனப்படுகலை தடுக்கத் தவறிய குற்றத்திலும் அனைத்து நாடுகளுக்கும் பொறுப்புள்ளது. நாடு என்பது வெறும் நிலம் மட்டுமல்ல, மனிதர்களாலும் உணர்வுகளாலும் இறையாண்மையாலும் கட்டப்பட்டது. அந்த மண்ணின் மனிதர்கள் கொல்லப்படுவதும் ஒரு இனமே அழிக்கப்படுவதும் வரலாற்றின் பக்கங்களில் கருகிய நிழலாகவே பதியும். போரில் வெற்றித்தோல்விகள் ஏற்படலாம் ஆனால், அப்பாவி மக்கள் கொல்லப்படும் போது அங்கு முழுமையாக தோற்பது மனிதம் தான்.ா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com