குரூப் 2 தேர்வு ரத்துசெய்யப்பட்டதற்கு திமுக அரசை விமர்சித்த EPS web
தமிழ்நாடு

”ஒரு தேர்வைக் கூட நடத்த வக்கில்லாத கையாலாகாத அரசு..” - EPS கண்டனம்!

குரூப் 2 தேர்வு நடைபெற வினாத்தாள் வழங்கப்பட்ட பிறகும் பாதியிலேயே நிறுத்தப்பட்ட விவகாரத்தில் ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான தமிழக அரசை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்..

Rishan Vengai

இன்று நடைபெறவிருந்த குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு கோளாறால் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்தாண்டு செப்டம்பர் 28ஆம் தேதி 828 அரசுப் பணியிடங்களுகாக குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ-ன் முதல் நிலைத்தேர்வு நடந்தது. மொத்தமாக 4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய இந்த தேர்வில், குரூப் 2-இல் 1126 பேரும், குரூப் 2 ஏ-இல் 9,457 பேரும் முதன்மைத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இன்று நடைபெற்ற குரூப்2 தேர்வு பாதியில் நிறுத்தப்பட்டதால் தேர்வர்கள் வேதனை

இந்தநிலையில் தான், தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தேர்வர்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் இரண்டும் வழங்கப்பட்ட பிறகு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறி அவை திரும்ப வாங்கப்பட்டு தேர்வர்கள் வெளியேற்றப்பட்டனர். தேர்வு பின்னர் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்தசூழலில் எப்போதும் ஒரு அரசுத் தேர்வானது தேர்வு நாளன்று இப்படி பாதியிலேயே நிறுத்தப்பட்டது இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தேர்வைக்கூட நடத்த கையாலாகாத அரசு..

தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த #TNPSC குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் "நிர்வாகம்" என்பது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை ,

இந்த ஒரு நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

#TNPSCGroup2 போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.

அதுவும், பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதே தெரியாமல் தேர்வு எழுதியுள்ளனர் என்ற பேரதிர்ச்சியான செய்திகளும் வருகின்றன.

“Technical Fault” என ஒற்றை வரியில் தப்பிக்க முயலுகின்ற திமுக ஆட்சியாளர்கள், குரூப்- 2 என்பது எவ்வளவு முக்கியமான தேர்வு? அந்த Fault- ற்கு பின்னால் தேர்வெழுதிய இளைஞர்களின் பல ஆண்டுகால உழைப்பும் நம்பிக்கையும் சிதைந்துள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்

தமிழ்நாட்டை "சூப்பர்ஸ்டார்" மாநிலமாக மாற்றிவிட்டதாக வாய்கிழிய மேடையில் பேசும் பொம்மை முதல்வர் முக ஸ்டாலின் அவர்களே - ஒரு தேர்வைக் கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத கையாலாகாத அரசு தான் உங்கள் திமுக அரசு.

ஏற்கனவே 5.5 லட்சம் வேலைகளைத் தரப்போகிறோம் என 2021-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எல்லாம் காற்றில் பறந்துக்கொண்டு இருக்க, இருக்கின்ற தேர்வுகளைக் கூட ஒழுங்காக நடத்த வக்கற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2A தேர்வு குளறுபடிகளை அதிகாரிகள் மீது மட்டும் சுமத்தி , அவர்கள் மீது மட்டும் கண்துடைப்பு நடவடிக்கை எடுக்காமல் , இந்த தவறுகள் எதிர்காலத்தில் வராமல் இருக்க முறையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

தேர்வர்கள் அனைவரும் நம்பிக்கையோடு முயற்சிகளை தொடருங்கள், 2026-ல் அமையவுள்ள அதிமுக அரசானது, இளைஞர்களின் கனவுகளை ஈடேற்றும் அரசாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.