செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி pt web
தமிழ்நாடு

அதிமுக பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Rajakannan K

அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மனம் திறந்து பேசப்போகிறேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த நாள் முதல் அது தொடர்பாக மிகப்பெரிய விவாதமே நடந்து வந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று கோபிச் செட்டிப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் செங்கோட்டையன். அப்பொழுது பேசிய அவர், வெளியே சென்றவர்களை அரவணைத்தால்தான் நம்மால் வெல்ல முடியும் என்று வலியுறுத்தியதோடு, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைப்பது குறித்து ஏற்கனவே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தான் உட்பட முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் நேரில் வலியுறுத்தியதாகவும் ஆனால் அவர் ஏற்கின்ற மனைநிலையில் இல்லை என்றும் நேரடியாக குறிப்பிட்டு பேசினார்.

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி

ஒருங்கிணைப்பு நடைபெறவில்லை என்றால் வெற்றி பெற முடியாது என்று சுட்டிக்காட்டிய செங்கோட்டையன், “யார் யாரையெல்லாம் இணைப்பது என பொதுச்செயலாளரே முடிவுசெய்யட்டும் என்றும் மறப்போம் மன்னிப்போம் என்ற எம்ஜிஆர் பாணியில் செயல்பட வேண்டும்’’ என்றும் வலியுறுத்தினார்.

பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க 10 நாட்கள் காலக்கெடு கொடுத்த செங்கோட்டையன், ”அதற்குள் ஒருங்கிணைப்பு நடக்கவில்லை என்றால், இந்த மனநிலையில் இருப்பவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, வெற்றிகரமாக நினைத்ததை முடிக்க முயல்வோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

செங்கோட்டையன் கருத்துக்கு சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவோம் என்று திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக முக்கிய தலைவர்கள் தெரிவித்தனர். தேனியில் நேற்று பரப்புரையின்போது எடப்பாடி பழனிசாமி இதற்கு எதிர்வினை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று எதையும் அவர் பேசவில்லை. அதனையடுத்து, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.

இந்நிலையில், அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் செயலாளர் பொறுப்பிலும் இருந்தும், கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்தும், செங்கோட்டையன் இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய நீக்கம் தொடர்பாக புதிய தலைமுறைக்கு பேசிய செங்கோட்டையன், நீக்கம் தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் வேதனை இல்லை மகிழ்ச்சியே என்று கூறிய அவர் தர்மம் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன் என்றார்.