2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு web
தமிழ்நாடு

இடைக்கால பட்ஜெட்| ”மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு அதிகாரம்” - தங்கம் தென்னரசு!

மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

Rishan Vengai

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் முக்கிய அம்சமாக உள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசின் சாதனைகளை பாராட்டி, இலங்கைத் தமிழர்களுக்கான நலத்திட்டங்களுக்காக 486 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவதால் இந்த பட்ஜெட் வழக்கமான முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக அமைகிறது.

இடைக்கால பட்ஜெட்டில் புதிய அரசு அமைவது வரையிலான அரசின் செலவினங்களுக்கான நிதிஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்படும். சட்டமன்றத் தேர்தலுக்குமுன் தாக்கலாகும் பட்ஜெட் என்பதால் மக்களை கவரும் வகையில் அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026-27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்

பொது பட்ஜெட்டைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டை துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்

மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு அதிகாரம்..

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை வாசித்துவரும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வரும் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசை பாராட்டினார்.

உரையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “

இலங்கை தமிழர்கள் - முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உதவித்தொகை, திறன்பயிற்சி என பல்வேறு நலத்திட்டங்களுக்கு இதுவரை 486 கோடி செலவிடப்பட்டுள்ளது. மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு 10,469 வீடுகள் கட்ட 639 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

பெண்களுக்கான சாதனை - பெண் ஒதுவார் நியமனம் திமுக அரசின் மகத்தான சாதனை ஆகும். பெண்களின் பெயரில் பதிவுசெய்யப்படும் சொத்துக்களுக்கான பதிவுக் கட்டணம் ஒரு சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. மகளிரின் பாதுகாப்பிற்காகவும், தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து வாழவும் இளஞ்சிவப்பு ஆட்டோ வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதரவற்ற குழந்தைகள் - குழந்தைகள் பசியுடன் வரும் நிலையை மாற்றி பசி நீங்கிடும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தால் வருகை அதிகரித்து கற்றல் திறனும் அதிகரித்துள்ளது . பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாத்திடும் வகையில் 18 வகையிலான பள்ளிப்படிப்பை பயில அன்புக் கரங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மூத்த குடிமக்கள் - மூத்த குடிமக்களுக்காக 25 இடங்களில் அன்புச் சோலைகள் தொடங்கப்பட்டுள்ளன. தாயுமானவர் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு ரேசன் பொருட்கள் வீடு தேடிச் சென்று வழங்கப்படுகின்றன.

மாற்றுத்திறனாளிகள் - நாட்டிலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

திருநங்கைகள் - திருநங்கைகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் ஊர்காவல் படை பணியில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என பேசினார்.