எடப்பாடி பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரன் சந்திப்பு எக்ஸ்
தமிழ்நாடு

சேலம் | எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன் சந்திப்பு... நிலைப்பாட்டில் மாற்றம் வருமா ?

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி சேலத்தில் நடந்த மினி மரத்தான் போட்டியை தொடங்கி வைத்த பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், பின்னர் சேலத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.

PT WEB

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷ-வை சந்தித்துப் பேசியிருக்கும் நிலையில், இன்று சேலம் சென்ற நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. இத்தகைய சூழலில், பாஜக கூட்டணியில் இருந்த ஓ. பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதேவேளையில், செப்டம்பர் 5 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஒருங்கிணைப்பு பணிகளை தொடங்க வேண்டும் என்று கூறியதோடு அவருக்கு 10 நாட்கள் கெடுவும் விதித்திருந்தார். இதைத்தொடர்ந்து கெடு விதித்த அடுத்த நாளே செங்கோட்டையனை அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன்

இதைத்தொடர்ந்து, டெல்லி சென்ற செங்கோட்டையன் உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை சந்தித்துப் பேசியிருந்தார். தொடர்ந்து, அப்போதே எடப்பாடி பழனிசாமிக்கும் டெல்லியில் இருந்து அழைப்பு வரலாம் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்தான் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாம் ஆட்சியில் இருக்கும் போது நம்மை காப்பாற்றியவர்கள் என பாஜகவை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். தொடர்ந்து அடுத்த நாளே டெல்லி சென்று அமித் ஷா-வை சந்தித்து இருந்தார்.

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்ற கருத்தை கூறி வந்த பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சேலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி நடந்த மினி மரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர், சேலத்தில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்ற நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமியுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடைபெற்றதாகவும், செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்தது தொடர்பாக எதுவும் பேசவில்லை என கூறினார். தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார்களா என்ற கேள்விக்கு, அதனை அவர்களிடம் தான் கேட்க வேண்டுமென பதிலளித்தார். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டுமென்பதுதான் தன்னுடைய விருப்பம் எனவும் குறிப்பிட்டார்.