சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனை முடிவில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, மதுரை, திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர். திண்டுக்கல்லில் உள்ள ஐ. பெரியசாமியின் வீட்டிலும், கார்களிலும் அமைச்சரின் மகனும், எம்எல்ஏவுமான செந்தில்குமாரின் வீட்டிலும், மகள் இந்திராவின் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஐ.பெரியசாமி வீட்டின் முன்பு குவிந்த அவரது ஆதரவாளர்கள், வெளியே அமர்ந்துகொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அமலாக்கத் துறையின் நடவடிக்கையை கண்டித்து தொண்டர்கள் கோஷமிட்டனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்தில் மாலை 6 மணியளவில் சோதனை நிறைவடைந்த நிலையில், சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது.
இதற்கிடையே, சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் உள்ள செந்தில்குமாரின் அறையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். விடுதி பூட்டப்பட்டிருந்த நிலையில், சாவி கொண்டுவரப்பட்டு அறை திறக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2006-2010 வரை வீட்டு வசதித் துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 10 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் ஐ.பெரியசாமி, மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கில் 4 பேரையும் விடுவித்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.
இதற்கிடையே எம்எல்ஏக்கள் விடுதியில், அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறையினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அறை பூட்டப்பட்டிருந்ததால் செந்தில்குமார் உதவியாளர் சந்தோஷ் வந்து அறையை திறந்த பிறகு 5 மணி நேரத்துக்குப் பின் சோதனை தொடங்கி நிறைவடைந்தது. இந்நிலையில், அமலாக்கத்துறையினர் அத்துமீறியதாக காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.