48 மணி நேரத்தில் 321 பேரின் உயிரைப் பறித்த பெருவெள்ளம்.. நிலைகுலைந்திருக்கும் பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் வடமேற்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாயும் சுவாட் நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மாகாணத்தின் முக்கிய நகரமான மின்கோரா நீரில் மிதக்கிறது. மின்சாரம், தகவல் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை தொடங்கியது முதல் தற்போது வரை அதாவது சுமார் 48 மணி நேரத்தில் 321 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் பேரிடர் ஆணையம் தெரிவித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, மலைப் பகுதிகளைக் கொண்ட கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மட்டும் பலர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காணாமல் போயிருப்பதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதில் பெரும்பான்மையானோர் வெள்ளத்திலும், வீடுகள் இடிந்து விழுந்ததிலும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பனேர், பஜௌர், ஸ்வாட், ஷாங்க்லா, மன்சேரா மற்றும் பட்டாகிராம் ஆகிய மலை மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதிகளாக மாகாண அரசு அறிவித்துள்ளது. புனேர் மாவட்டத்தில் உள்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்திருக்கிறது.. விவசாய நிலங்கள் கடுமையாக சேதமடைந்திருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அம்மாவட்டத்தில் மட்டும் 93 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்டெடுக்கும் பகுதிகளிலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் சுமார் 2000 மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். அப்பகுதிகளின் சாலைகள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் மீட்புப் பணியாளர்கள் நடந்து சென்று மக்களை மீட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மீட்பு படையினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் பாகிஸ்தானின் வடமேற்கில் அடுத்த சில மணி நேரங்களுக்கான கனமழை எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியிருக்கிறது. அதோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், வீடுகளை இழந்த குடும்பத்தினருக்கு உணவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமைச் செயலாளர் ஷஹாப் அலி ஷா தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் மட்டுமின்றி நேபாளத்தின் சில பகுதிகளும் கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கிறது.