tech superstar sudharsan pt web
தமிழ்நாடு

‘இன்னும் 20 சவரன் கொடு... இல்லண்ணா....’ யூ-ட்யூபர் சுதர்சன் மீது வரதட்சணை புகார்

பிரபல யூடியூபர் சுதர்சன் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பாய்ந்துள்ளது.... 20 சவரன் கூடுதல் வரதட்சணை கேட்டு, மனைவிக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது... என்ன நடந்தது? எப்போது நடந்தது? வெளியான அதிர்ச்சி தகவல்கள்...

PT WEB

பிரபல யூடியூபர் சுதர்சன் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பாய்ந்துள்ளது.... 20 சவரன் கூடுதல் வரதட்சணை கேட்டு, மனைவிக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது... என்ன நடந்தது? எப்போது நடந்தது? வெளியான அதிர்ச்சி தகவல்கள்...

தமிழில் Tech Superstar என்ற பெயரில் யூ-ட்யூப் சேனல் நடத்தி வருபவர் சுதர்சன். இவர் 4 ஆண்டுகளாக காதலித்து, விமலா தேவி என்ற பெண்ணை, இருவீட்டார் சம்மதத்துடன் 2024-ல் திருமணம் செய்துள்ளார். விமலா தேவி, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் 30 சவரன் தங்க நகைகள், 5 லட்ச ரூபாய் ரொக்கப் பணம், 2 லட்ச ரூபாய் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மேலும் 20 சவரன் தங்க நகைகளும், மேற்கொண்டு பணமும் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கடந்த ஜூன் 27ம் தேதி யூடியூபர் சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவர் மனைவி விமலா தேவி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 20 சவரன் தங்கநகை

தன் புகாரில் விமலா தேவி, “திருமணமான 3 மாத காலத்திற்குள், சொந்தமாக வீடு கட்டுவதாக சொல்லி என்னிடமிருந்த 30 பவுன் நகையை வாங்கிவிட்டார் சுதர்சன். புது வீட்டு பணிகள் முடிந்து, நாங்கள் அங்கு குடி போன பின், வீட்டுக்கடனை அடைக்க முடியவில்லை என்று சொல்லி ‘நீ கொண்டுவந்த சீர்வரிசை போதாது; இன்னும் 20 பவுன் நகை வாங்கிட்டு வா’ என சொன்னதுடன், என்னை அசிங்கமாகவும் பேசினார். நான் கர்ப்பமாக இருந்ததால், பெற்றோருடன் சென்றுவிட்டேன். பின் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது... அதில் என் பெற்றோர், 5 லட்ச ரூபாய் கொடுத்தனர். பின்னும் வேறொரு நேரத்தில் 10 லட்ச ரூபாய் கொடுத்தனர்; இவை எல்லாவற்றுக்கும் பின்னும் நகை கொண்டு வந்தால்தான் வாழமுடியும் என்று கூறி, என்னை பற்றி அசிங்கமாக பேசி தற்போது கொலைமிரட்டல் விடுக்கிறார் சுதர்சன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுதர்சன் தனது தாயுடன்

இந்த புகாரின் அடிப்படையில், யூடியூபர் சுதர்சன், அவரது தந்தை சுந்தரராஜன், தாய் மாலதி, சகோதரி சக்தி பிரியா, மைத்துனர் விக்னேஷ்வரன் ஆகிய 5 பேர் மீது, தேனி அனைத்து மகளிர் காவல் துறையினர் வரதட்சணை கொடுமை வழக்கு, கூடுதல் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே சுதர்சனுக்கும், Tech Boss என்ற யூட்யூப் சேனலை சேர்ந்தவர்களுக்கும் பிரச்னை இருந்தது குறிப்பிடத்தக்கது. சக யூட்யூபர்களுடனான சுதர்சனின் பிரச்னை கொஞ்சம் ஓய்ந்த நிலையில், அவர்மீது வரதட்சனை வழக்கு பாய்ந்துள்ளது பூதாகாரமாகியுள்ளது!