விஜய் - பிரேமலதா  Pt web
தமிழ்நாடு

”ஒரு வார்த்தை கூறி இருந்தால் துணை முதல்வர்; சோஃபாவுக்கு ஆசைபடாத ஒரே கட்சி தேமுதிக” - பிரேமலதா

நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், முதல்வர் விஜய் வீடுதேடி வந்து துணைமுதல்வர் பதவி கொடுத்திருப்பார் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Premkumar S

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் திமுக கூட்டணியில் இருந்து 10 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்ட நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் மட்டுமே விருதாச்சலத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றிருக்கிறார். ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காமல், திமுக கூட்டணி கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியிருந்த போது கூட, தவெகவுக்கு ஆதரவு கிடையாது என வெளிப்படையாகவே அறிவித்திருந்தது தேமுதிக.

பிரேமலதா விஜயகாந்த்

இந்தசூழலில் தான், சென்னையில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசியுள்ள பிரேமலதா தவெகவை கடுமையாக விமர்சித்துள்ளார். பிரேமலதா பேசுகையில், ”தொண்டர்களாகிய நீங்கள் முடிவெடுத்த கூட்டணியில் தான் தற்போது வரை தொடர்கிறோம். வெற்றி தோல்விகளைக் கொண்டதே தேர்தல். பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு ஆதரவு தரும்படி நம்மை அணுகினர். நான் மட்டும் ஒரு வார்த்தை கூறியிருந்தால், முதல்வர் விஜய் வீடுதேடி வந்து துணைமுதல்வர் பதவி கொடுத்திருப்பார். ஆனால், அதற்கெல்லாம் நாம் ஆசைப்படவில்லை.

யார் மற்ற கட்சிகளிடம் பேசினாரோ, அதே நபர் தான் எங்களிடமும் பேசினார். ஆனால், தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி; தேர்தலுக்கு பின் ஒரு கூட்டணி என்ற நிலை நம்மிடம் இல்லை. அதேசமயம், இது உண்மையான தேர்தலே இல்லை என மக்கள் நினைக்கின்றனர். சினிமா கவர்ச்சி என்ற மாயையால் கிடைத்தது இந்த வெற்றி. விரலில் வைத்த மை கூட காயத நிலையில், பதவியை ராஜினாமா செய்வது தமிழ்நாட்டுக்கு கேடு. ஆனால், பேரத்திற்கும் பதவிக்கும் சோஃபாவுக்கும் ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிகதான். யாரை தீய சக்தி என தவெக சொன்னதோ அந்த தீய சக்தியின் ஆதரவோடுதான் ஆட்சி நடந்து வருகிறது. தவெக ஆட்சிக்கு 6 மாதம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் தான். ஆனால், இந்த காலத்தை ஹனிமூன் பீரியட் எல்லாம் பார்க்க முடியாது; அவதிக் கால பீரியட் என மக்கள் நினைக்கின்றனர்” எனத் தெரிவித்திருக்கிறார்.