நாமக்கல் மற்றும் கரூரில் இன்று தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்யவிருக்கும் நிலையில், கரூரில் விஜய்க்கு எதிராக திமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை தவெக தலைவர் விஜய், கடந்த 13ஆம் தேதி திருச்சி, அரியலூரில் தொடங்கினார். இரண்டாம் கட்டமாக நாகை, திருவாரூரில் கடந்த 20ஆம் தேதி விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
இந்நிலையில், 3ஆவது கட்டமாக நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் விஜய் இன்று பரப்புரையில் ஈடுபடுகிறார். இன்னும் சற்றுநேரத்தில் நாமக்கல்லில் கே.எஸ்.திரையரங்கம் அருகே பரப்புரையில் ஈடுபடுகிறார் விஜய்.
இந்தசூழலில் அடுத்து கரூருக்கு விஜய் பரப்புரைக்கு செல்லவிருக்கும் நிலையில், அங்கு திமுக சார்பில் விஜய்க்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
விஜய் தனது பரப்புரையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அடிப்படை வசதிகள், மக்கள் நலத்திட்டங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்று ஆளுங்கட்சியான திமுகவை விமர்சனம் செய்து வழுகிறார்.
இந்நிலையில் இன்று கரூரில் விஜய் பரப்பரை மேற்கொள்ள உள்ள நிலையில், திமுக சார்பில் நகர மேம்பாட்டுக்காக நான்கு ஆண்டுகளில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளதாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன.
ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ’வாங்கண்ணா வணக்கங்கண்ணா உங்க ஃபேக்ட் எல்லாம் செக் பண்ணுங்க...
சும்மா தெரியாம உளராதீங்க அண்ணா… தமிழ்நாட்டு வளர்ச்சியை பாருங்க அண்ணா..’ என அண்ணா... அண்ணா... என்று விஜயை பேசும் தொனியில் போஸ்டர்கள் கரூர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன..
அதேபோல மற்றொரு போஸ்டரில் விஜய் ஊழலை ஒழிக்க வந்திருக்கேன் என்று கூறுவது போலவும்... அதற்கு வருமான வரித் துறை 1.5 கோடி அபராதத்தை கட்டிட்டு ஊழலை ஒழிச்சுக்கோங்க என்று சொல்லுவது போலவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.