தீபாவளி கொண்டாட்டம் pt web
தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி.. தலைவர்கள் வாழ்த்து

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாப்பட்டு வருகிறது.

PT WEB

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அண்டை வீட்டார் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர். மேலும் கோயில்களுக்கு சென்று, சிறப்பு வழிபாடும் மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக திரையரங்குகள் மற்றும் சுற்றுலாத்தலங்களுக்கு மக்கள் அதிகளவில் செல்வார்கள் என்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பட்டாசுகள் வெடிப்பதற்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்தியுள்ள இடங்கள், குடிசைகள் அல்லது ஓலைக் கூரைகள் உள்ள இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும், பட்டாசுகளைக் கொளுத்தித் தூக்கி எறிந்து விளையாடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு- காஷ்மீரின் எல்லை பகுதிகளில் இந்திய ராணுவத்தினர் விளக்குகள் ஏற்றி தீபாவளியை கொண்டாடினர். எல்லைப் பகுதியில் துப்பாக்கியுடன் தேசப்பணியில் ஈடுபட்டுள்ள வேளையிலும், விளக்குகளை ஏற்றி ராணுவ வீரர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல பாகிஸ்தான் எல்லையில் பாடல்கள் பாடியும், நடனமாடியும் ராணுவ வீரர்கள் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

இதற்கிடையே பல்வேறு தலைவர்களும் தீபாவளி திருநாளுக்கான வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தீபாவளி திருநாள் அமைதி மற்றும் ஒற்றுமையில் வேரூன்றிய இணக்கமான சமூகத்தை வளர்க்கட்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தீபாவளி திருநாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும் என்றும், துன்பங்கள் மறைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும் எனவும் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை

மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் வகையில் ஆட்சி நடத்தும் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டும் நிலை உருவாகி வருவதாக குறிப்பிட்டுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தீமையை வதம் செய்த தீபாவளி திருநாளில் வகுப்புவாத நச்சு சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திட, மாசில்லா தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட தீப ஒளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.