18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. 23 மற்றும் 24ஆம் தேதிகளில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போன்று, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதோடு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. 23ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.