விஜய், வன்னி அரசு, திருமாவளவன், ஆதவ் அர்ஜூனா pt web
தமிழ்நாடு

வன்னி அரசு vs ஆதவ் அர்ஜுனா | விஜய் பங்கேற்கும் நிகழ்வால் சர்ச்சை.. விசிகவுக்குள் சகோதர யுத்தமா?

நாளை புத்தக வெளியீடு நடைபெறவிருக்கும் நிலையில், இன்று வன்னி அரசு பகிர்ந்த பதிவி பேசுபொருளாக மாறியுள்ளது.

இரா.செந்தில் கரிகாலன்

“அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் என எமது தலைவர் கூறவில்லை. புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவுமில்லாமல் அரசமைப்புச் சட்டத்தை ஒரு கையிலும், பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றுதான் சொன்னார். ஆனால் நூல் வெளியீட்டாளர்கள் எமது தலைவரைப் புறக்கணித்துவிட்டுப் பாயாசம்தான் வேண்டும் எனப் போயிருக்கிறார்கள். அது அவர்கள் விருப்பம்” என விசிகவின் துணைப் பொதுச் செயலாளர்களுள் ஒருவரான வன்னி அரசு, மற்றுமொரு பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

நாளை புத்தக வெளியீடு நடைபெறவிருக்கும் நிலையில், இன்று இப்படியொரு கருத்தை வன்னி அரசு தெரிவித்திருப்பது பரபரப்பைப் பற்றவைத்துள்ளது..,

நடந்தது என்ன?

வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ (VOICE OF COMMONS FOUNDATION) எனும் தேர்தல் வியூக நிறுவனத்தை நடத்திவந்த ஆதவ் அர்ஜுனா, 2024 ஜனவரியில் திருச்சியில் நடந்த, வெல்லும் சனநாயகம் மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த மாநாடு மட்டுமல்ல, அதற்கு முன்பாகவும் மாவட்டச் செயலாளர்கள் நியமனம், பூத் கமிட்டி கூட்டம் தொடங்கி விசிகவின் பல்வேறு நிகழ்வுகளுக்குப் பின்புலமாக ஆதவ் ஆர்ஜுனாவே செயல்பட்டதாகச் சொல்லப்பட்டது. பிப்ரவரி மாதம் 15-ம் தேதி, விசிக உயர்நிலைக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில், அவர் துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து, மே மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, இரண்டு தனித் தொகுதியோடு ஒரு பொதுத் தொகுதியையும் விசிக, திமுகவிடம் கேட்டது. அந்த ஒரு பொதுத் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடப் போகிறார் என்றும் சொல்லப்பட்டது.

ஆதவ் அர்ஜூனா

ஆனால், இரண்டு தொகுதியில் மட்டுமே ஒதுக்கப்பட்டன. இது ஒருபுறமிருக்க, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு தனியார் நாளிதழுக்கு ஆதவ் அர்ஜுனா கொடுத்த நேர்காணலில், “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களே துணை முதல்வராகும்போது, 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட எங்கள் தலைவரை துணை முதல்வராக்க நாங்கள் விரும்புவதில் தவறில்லை” எனப் பேசியது, கூட்டணிக்குள் மட்டுமல்லாது விசிகவுக்குள்ளும் அனலைக் கிளப்பியது. அதுமட்டுமல்ல.

சமரச பாயாசம்

விசிகவின் மது ஒழிப்பு மாநாடு, அதற்கான அறிவிப்பின்போது அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது என அந்தச் சம்பவங்களுக்குப் பின்னாலும் ஆதவ் அர்ஜுனாவே இருப்பதாகச் சொல்லப்பட்டது. இது ஒருபுறமிருக்க, ஆதவ் அர்ஜுனா நிறுவனம் தொகுத்த அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய், மற்றும் திருமாவளவன் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பின்னாட்களில் திருமாவளவன் பங்கேற்கவில்லை என்பது விகடன் வெளியிட்ட நிகழ்ச்சி நிரலின்மூலம் அதிகாரபூர்வமாக தெரியவந்தது. திருமாவும் விஜய்யும் ஒரே மேடையை பகிர்வதை கூட்டணி கட்சியான திமுக விரும்பவில்லை என்பதற்காகவே திருமாவளவன் இந்த முடிவை எடுத்துள்ளார் என்கிற தகவல்கள் வெளியாகின. அது தொடர்ச்சியாக பேசுபொருளாகவும் இருந்தது. இதுகுறித்து திருமா மிக நீண்ட விளக்கம் ஒன்றை அறிக்கையாகவும் வெளியிட்டார்.

புரட்சியாளர்களைப் பொட்டலம் கட்ட முடியாது - வன்னி அரசு

இந்தநிலையில், நாளை புத்தக வெளியீட்டு நிகழ்வு நடைபெறவிருக்கும் நிலையில், இன்று விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு தன் எக்ஸ் தளத்தில், ``நாளை திசம்பர் 6 அன்று நடக்கவிருக்கும் ‘அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில், திமுக கொடுத்த நெருக்கடியால்தான் எங்கள் தலைவர் போகவில்லை என உள்நோக்கம் கற்பிக்கிறார்கள். அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் என எமது தலைவர் கூறவில்லை. புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவுமில்லாமல் அரசமைப்புச் சட்டத்தை ஒரு கையிலும் பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றுதான் சொன்னார். ஆனால் நூல் வெளியீட்டாளர்கள் எமது தலைவரைப் புறக்கணித்துவிட்டுப் பாயாசம்தான் வேண்டும் எனப் போயிருக்கிறார்கள். அது அவர்கள் விருப்பம். ஆனால், எங்கள் தலைவர் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பது எமது தலைவரை அவமதிப்பது மட்டுமல்ல, புரட்சியாளர் அம்பேத்கரையும் அவமதிப்பதே ஆகும்’’ எனப் பதிவிட்டுள்ளார்..,

வன்னி அரசின் இந்தப் பதிவில் விஜயை மறைமுகமாக விமர்சித்திருப்பதோடு, ஆதவ் அர்ஜுனாவையும் விமர்சித்திருப்பதுதான் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதுஒருபுறமிருக்க, மழைக்காலத்தில் ஆளும் கட்சி சரியாகப் பணி செய்யவில்லை என விமர்சித்து நேற்றும் ஜெயலலிதாவைப் புகழ்ந்து இன்றும் ஆதவ் அர்ஜுனா அவரின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதும் கவனிக்கத்தக்க விஷயமாக மாறியிருக்கிறது..,