இது என்ன விநோதமா இருக்கு! பெங்களூரில் திடீரென அதிகரித்து வரும் பால் பாக்கெட் திருட்டு சம்பவங்கள்!
பெங்களூரில் தொடர்ந்து அதிகரித்து வரும் பால் திருட்டு..
சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் குடியிருப்பு பகுதிகளில் பாலுக்காக பைகளோ அல்லது கவர்களோ தொங்கிக்கொண்டு இருக்கும். அதிகாலையில் வரும் பால் விற்பனையாளர்கள் பால் கவர்களை தொங்கவிடப்பட்டுள்ள பைகளில் போட்டு செல்வது வழக்கம். பிறகு உரிமையாளர்கள் அதை எடுத்துக்கொள்வது வழக்கம். இது எல்லா அப்பார்ட்மெண்டுகளிலும் எழுதப்படாத விதி...
இந்த விதியை தற்பொழுது பால் கொள்ளையர்கள் உடைத்து வருகின்றனர். ஆம்.. பெங்களூரில் பால் விலை உயர்ந்து வருவதால், அங்கு பால் திருட்டு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த வாரம் அதிகாலையில் கோணனகுண்டே மெட்ரோ ரயில் நிலையம் அருகே திலீப் என்பவர் KMF பால் பண்ணையில் இருந்து பால் பெட்டிகளில் பாலை எடுத்து வந்துள்ளார். அச்சமயம் இரு இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், திலீப்பின் ரூ.1000 மதிப்புள்ள பால் பெட்டியைத் திருடி சென்றது அப்பகுதியில் இருக்கும் சிசிடிவியில் பதிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதை அடுத்து திலீப் இச்சம்பவத்தை குறித்து போலிசில் புகார் அளித்தார். சிசிடிவி யை சோதனையிட்ட போலிசார், திருடி சென்ற சமயம், மழைப் பெய்துக்கொண்டிருந்ததால் வாகனத்தின் நம்பர் ப்ளேட் சரிவர தெரியவில்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதே போன்று குடியிருப்பு பகுதிகளில் தொங்கவிடப்பட்ட பைகளில் இருந்த பால் பாக்கெட்டுகளை இரு பெண்கள் திருடி செல்லும் சம்பவமும் சிசிடிவி மூல தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து இது போன்று பல பால் திருட்டு நடந்து வருவதாக பெங்களூரு மக்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.