தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை pt web
தமிழ்நாடு

கனமழை: வீடுகளுக்கு முன் தேங்கிய நீர்; தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்தது?

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த நிலையில், அதுதொடர்பான செய்திகளை தொடர்ச்சியாக

PT WEB

சேலம்

சேலம் மாவட்டம் எடப்பாடி, சங்ககிரி பகுதிகளில் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்று காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

தருமபுரி

தருமபுரியில் கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழை மற்றும் நேற்று பெய்த கனமழையால் இலக்கியம்பட்டி ஏரி நிரம்பி, அதன் உபரி நீர் வெளியேறி வருகிறது. 15 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஏரியின் கரை வலுவாக இல்லாததால் அதிகப்படியான நீர் வெளியேறி வருகிறது. உபரி நீர் வெளியேறும் பகுதியில் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தி உள்ளனர்.

வேலூர்,  குடியாத்தம்

ஆந்திராவில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 2,300 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால், கவுண்டன்ய மகாநதியின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்குவதோ, கரையோரம் செல்வதோ கூடாதென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

தென்காசி, வாசுதேவநல்லூர்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே உள்ள இராமநாதபுரத்தில், விநாயகர் கோயில் தெருக்களில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் வாசல் படி வரை மழைநீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், தேங்கியுள்ள நீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தையும், கோட்டாட்சியரையும் தொடர்புகொண்டோம். ஆனால் இதுவரை, எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.

விருதுநகர், சாத்தூர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தெருக்களில் தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததில் சாத்தூர் மற்றும் வெங்கடாச்சலபுரம் ஊராட்சி என்ஜிஓ காலனி, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்பதுடன் சேரும் சகதியுமாகக் காணப்படுகிறது. தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வெங்கடாசலபுரம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில்வீரர்பட்டியைச் சேர்ந்த அய்யனார் தனது குடும்பத்தினருடன் மலைப்பட்டியில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். மலைப்பட்டிக்கும், கோவில்வீரர்பட்டிக்கும் இடையில் உள்ள தரைப்பாலத்தை கடக்கும்போது எதிர்பாராத விதமாக அவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அய்யனார் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் உயிர் தப்பிய நிலையில், அவர்களின் 5 வயதான மகன் அரவிந்த் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், சிறுவனின் சடலத்தை மீட்டனர்.

மதுரை

மதுரையில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அண்ணாநகர், தல்லாகுளம், தெப்பக்குளம், சிந்தாமணி, அவனியாபுரம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. ராஜபாளையத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது. நேற்று சிறிது நேரம் மட்டும் மழை பெய்த நிலையில், இன்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.

தூத்துக்குடி திருச்செந்தூர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்துவந்த நிலையில், மழை பெய்தது. பலத்த மழையால் சிவன் கோயிலுக்குள் மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.