temperatures in Tamil Nadu are set to drop X
தமிழ்நாடு

முடிவுக்கு வரும் சூப்பர் எல் நினோ: தமிழ்நாட்டில் அடுத்து மழைதான்.. டெல்டா வெதர்மேனின் கணிப்பு என்ன?

தமிழ்நாட்டில் வெப்பம் குறைந்து அடுத்தடுத்து மழைக்கு வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் கூறியுள்ளார்.

Praveen Joshva L

சூப்பர் எல் நினோ காலகட்டம் முடிவடையும் நிலையில், தமிழ்நாட்டில் நீடித்த வெப்பம் குறைந்து, வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 முதல் தொடங்கும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

21-ம் நூற்றாண்டில் உலகம் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சினையாக காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. சமீப காலமாக அதிகப்படியான கார்பன் வெளியேற்றம் காரணமாக வளிமண்டலத்தின் வெப்பம் தொடர்ந்து உயர்ந்து வருவது மாபெரும் அபாயமாக உருவெடுத்துள்ளது.

குறிப்பாக இந்த காலமாற்றத்தில் பசிபிக் பெருங்கடல் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் மிகப்பெரும் பெருங்கடலான பசிபிக் பெருக்கடல், கிட்டத்தட்ட உலகின் பாதி இடத்தை ஆக்கிரமித்துள்ளது. இதனால் உலகின் காலநிலையை தீர்மானிக்கும் முக்கிய பங்கை இந்த பசிபிக் பெருங்கடல் வகிக்கிறது. அங்கு நேரும் சிறுமாற்றம் கூட உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில், பசிபிக் பெருங்கடலின் மேல்பகுதி வெப்பம் சராசரி அளவை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தாலே அது பல்வேறு நாடுகளின் வானிலைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த விளைவே எல் நினோ என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு இந்த கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பான அளவை விட 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் தொடர்ந்து உயர்ந்து காணப்படுவதால் இந்த ஆண்டு சூப்பர் எல் நினோ ஆண்டாக பதிவாகியுள்ளது.

இந்த சூப்பர் எல் நினோ காரணமாக ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை வீசியதோடு, பெரிய அளவிலான சூறாவளிகள் உருவாகி உலக அளவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த சூப்பர் எல் நினோ காலகட்டம் விரைவில் முடிவடையும் என்றும், இதனால் தமிழ்நாட்டில் நீடித்த கோடை வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும் என்றும் சுயாதீன வானியல் நிபுணர் ஹேமச்சந்திரன் கூறியுள்ளார்.

Delta weatherman Hemachandran

மேலும், தமிழ்நாட்டுக்கு பெரிய அளவில் மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 முதல் 21-ம் தேதிக்குள் தொடங்க வாய்ப்பு என இந்திய வானிலை மையம் குறிப்பிட்டிருந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா பகுதிகளில் அக்டோபர் 15-ம் தேதி தொடங்கும் என்றும், இந்த பருவமழை ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் சீரான மழையை கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், நாளை தெற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும், இந்த தாழ்வுப் பகுதி இலங்கை-தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து பருவமழையை துவக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.