\
northeast monsoon will get in this month
RainANI

2 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வரும் அக்டோபர் மாத 2 -வது வாரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Published on: 

செய்தியாளர் - கார்த்திகேயன்

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகிய 3 சொற்களை வானிலைச் செய்திகளில் அதிகம் கேள்விப்பட்டிருப்பார்கள். காற்றழுத்தத் தாழ்வு பகுதி என்பது வளிமண்டலத்தில் சுற்றியுள்ள பகுதிகளைவிட, காற்று அழுத்தம் குறைவாக இருக்கும் ஆரம்ப நிலையாகும். இது, அதிக காற்றுடன் சுழலும்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்ற நிலை உருவாகும். இது இன்னும் வலிமையாக மாறினால், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் என்றும், அதன் தொடர்ச்சியாக புயலும் ஏற்படும். சில சமயயங்களில், இதில் ஏதாவது ஒரு படிநிலை, அடுத்தகட்டத்திற்கு மாற்றம் பெறாது.

Rain
RainANI

இப்படிதான், வளிமண்டலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு, அடுத்தடுத்த படிநிலைகளை அடைகிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் தாக்கத்தால், வரும் அக்டோபர் 13-ஆம் தேதி அன்று, அந்தமான் அருகே, புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கத்தால், அக்டோபர் 13-க்கு பிறகு, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய கடலோர மாவட்டங்களில், கனமழை முதல் மிகக்கனமழை வரை பெய்யக் கூடும் என்று தெரிவித்த வானிலை மையம், கடலோரப் பகுதிகளில் பலத்தக் காற்று வீசுவதோடு, கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனால், அந்தமான் கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இறுதியாக, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், அக்டோபர் 15-இல் இருந்து 21-ஆம் தேதிக்குள் வடகிழக்குப் பருவமழைக்கு வாய்ப்பு எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com