டிட்வா புயல் காரணமாக சென்னையில் நீண்ட நாள் நீடித்த மழையால், 27 ஆண்டுகளில் முதல் முறையாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் வரவிருக்கும் கோடைக்காலத்தில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
டிட்வா புயல் சென்னையில் நீண்ட நாள் நீடித்த காரணத்தால் சென்னை ஒரு பெரும் பாதிப்பில் இருந்து தப்பியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி இலங்கை கடல் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி டிட்வா புயலாக மாறி, இலங்கையில் பெரும் நாசத்தை விளைவித்தது. இலங்கையில் மட்டும் இந்த புயலின் காரணமாக 450க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இலங்கையின் நிலப் பகுதியில் நீண்டநேரம் நிலைகொண்ட இந்த டிட்வா புயல் அடுத்ததாக, தமிழ்நாட்டின் கடல் பகுதி வழியே பயணித்து சென்னை அருகே நீண்ட நேரம் நிலைகொண்டது.
பின்னர் வலுவிழந்த இந்த புயல் சுமார் 3 நாட்களுக்கும் மேல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழையை கொடுத்தது. தொடர்ந்து தாழ்வுமண்டலமாக புதுச்சேரி -மரக்காணம் இடையே கரையை கடந்து மேலும் வலுவிழந்து, தமிழக நிலப்பகுதியில் பயணித்து மறைந்துபோனது.
இதன் காரணமாக தமிழ்நாட்டின் உள்பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. பொதுவாக வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் நல்ல மழைப்பொழிவு இருக்கும். ஆனால், இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதுமே நவம்பர் மாதத்தில் சுமார் 25% முதல் 30% வரை மழைப்பொழிவு குறைவாகவே இருந்ததாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
அதிலும், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் குறைவான மழைப்பொழிவு காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களில் குறைவான நீர் இருப்பே இருந்தது. இதனால் அடுத்த ஆண்டு கோடையில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை உருவாகுமோ என்ற அச்சம் எழுந்தது.
ஆனால், டிட்வா புயல் காரணமாகவும், அதன் பின்னரும் தொடர்ந்து மழைப்பொழிவு பதிவானது. இதனால் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளில் முதல் முறையாக, பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
கடைசியாக 1998-ஆம் ஆண்டு பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்கள் முழு கொள்ளளவை எட்டின. தற்போது டிட்வா புயல் காரணமாக மீண்டும் இந்த நீர் தேக்கங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இந்த 3 நீர் தேக்கங்களில் மட்டும் 12,000 மில்லியன் கன அடிக்கும் அதிகமான நீர் இருப்பு உள்ளது.
இதனால் வரவிருக்கும் கோடைக்காலத்தில் சென்னைக்கு எந்தவிதமான பெரிய குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படாது என சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.