பெ. சண்முகம் Pt web
தமிழ்நாடு

புதிய கூட்டணி அமைக்க அழைப்பு.. தவெக கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுதி!!

தவெக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், அந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

Premkumar S

தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் அதிக இடங்களை வென்றது. பின்னர் காங்கிரஸ், விசிக, IUML, இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். முதலில், வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு தருவதாக கூறிய, விசிகவும் IUML-லும் பின்னர் அமைச்சரவையில் இணைந்து விட்டன. எனினும், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்தே ஆதரவு என்ற நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்து வருகின்றன.

பெ. சண்முகம் - விஜய்

அதேபோல, கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தவெக தோழமைக் கட்சி கூட்டத்திலும் இரண்டு இடதுசாரி கட்சிகளும் பங்கேற்கவில்லை. இந்தச்சூழலில் தான், கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து தவெகவின் கூட்டணிக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறவிருக்கிறது. இதில், பங்கேற்க தவெகவிற்கு ஆதரவளித்துள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தச்சூழலில் தான், நாளைய தவெக கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பெ. சண்முகம், கடந்த 4-ம் தேதி தமிழக அமைச்சர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்து செப்டம்பர்-9 ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் தமிழக வெற்றி கழகம் சார்பில் நாளை நடைபெறும் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது எனத் தெரிவித்தார். அதேசமயம், தவெகவின் நிலைப்பாட்டை பொறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 5 ஆண்டுகால ஆதரவு இருக்கும் எனவும் உறுதியளித்திருக்கிறார்.