தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று சில மாதங்களே ஆன நிலையில், அது மூன்று மாதம் கூட நீடிக்காது என ஸ்டாலின் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. புதிய ஆட்சிக்கு அவகாசம் தர வேண்டும் என இடதுசாரிகள் வலியுறுத்துகின்றனர். சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், அனுபவமிக்க தலைவரான ஸ்டாலின் இவ்வாறு கூறியிருக்கக் கூடாது என விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் இருபெரும் திராவிட கட்சிகளான திமுக, அதிமுக இரண்டையும் ஓரங்கட்டி விஜய் தலைமையிலான தவெக ஆட்சியைபிடித்துள்ளது, விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். ஆட்சி மாற்றம் நடந்துவரும் சூழலில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர். திமுக இன்ஸ்டாகிராம், கவர்ச்சியால் தான் தவெக ஆட்சியை பிடித்துவிட்டது என்றும், விரைவில் இந்த ஆட்சி கலைந்துவிடும் என்று கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்தசூழலில் சமீபத்தில் பேசிய முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின், ”தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி குறித்து ஆறு மாதங்களுக்கு நான் பேசப் போவ தில்லை என்று கூறினேன். ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்பே பேச வேண்டிய ஒரு சூழ்நிலை வந்துவிடுமோ என்ற அச்சம்தான் இருந்தது. அத்தகைய சூழலும் தற்போது வந்துவிட்டது. 6, 5, 4 மாதங்கள்கூட அல்ல, இன்னும் 3 மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான் மாற்றுக் கட்சியினர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.
முக ஸ்டாலினின் இத்தகைய கருத்திற்கு பிறகு தவெக ஆட்சி நிலைக்காது என்ற கருத்துகள் சார்ந்து பதிலளித்த சிபிஎம் சண்முகம், “ஆட்சிக்கு புதியதா வந்திருக்காங்க, எந்த துறை எப்படி இருக்கிறது என்று புரிந்துகொள்வதற்கு அவர்களுக்கு அவகாசம் வேண்டும். சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு முதல்வர் வருகிறார் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள், அது நல்ல விசயம் தானே. அதற்குள் ஆட்சி கலைந்துவிடும் என்று சொல்வது தவறான விசயம். ஒன்னே முக்கால் கோடி மக்கள் தேர்வுசெய்து ஆட்சியில் அமரவைத்துள்ளார்கள், அதை 2 மாதம் கூட தாங்காது, 3 மாதம் கூட தாங்காதுனு சொல்வது என்ன பேச்சு? இதை யார் சொன்னாலும் தவறுதான்” என பேசியிருந்தார்.
இந்தசூழலில் சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியனும் கிட்டத்தட்ட இதே கருத்தையே வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “தமிழ்நாட்டின் மூத்த தலைவர். பல்வேறு பொறுப்புகளை வகித்த அனுபவம் மிகுந்தவர். ஒரு பெரிய ஜனநாயகக் கட்சியின் தலைவரான மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் அவ்வாறு கூறியிருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கருத்து. இந்தியா கூட்டணியில் இடதுசாரிகள் அங்கம் வகிக்கிறோம். இந்தியா கூட்டணி வலுபெற வேண்டும், கட்சி நலன்களுக்கு அப்பாற்பட்டு, இந்திய நலன்களை முன்னிறுத்துகிறபொழுது இந்தியா கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். திமுக மற்றும் மதச்சார்பற்ற கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா இல்லையா என்பதை கூட்டம் கூட்டி அறிவிப்போம்” என்று பேசினார்.