நார்வே செஸ் 2026-ல் வென்று சாதனை.. பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதல்வர் விஜய்!
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராக சாம்பியன் பட்டத்தை வென்று கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாதனை படைத்துள்ள நிலையில், இன்று முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உயரிய ஊக்கத் தொகையான 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் விஜய் பிரக்ஞானந்தாவிடம் வழங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, தனது மேசையிலேயே பிரக்ஞானந்தாவுடன் முதல்வர் விஜய் செஸ் விளையாடியிருக்கிறார். இதுதொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் தமேகநாத ரெட்டி கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, “முதல்வர் விளையாடுவார் என எதிர்பார்க்கவில்லை,அவர் விளையடுவார் என எனக்கு தெரியாது நண்பர்களுடன் விளையாடுவேன் என தெரிவித்தார்,நன்றாக விளையாடினார். 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கி உள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினர் நல்ல உதவிகளை செய்கின்றனர் அதற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

