ரேஷன் பொருட்கள் வாங்கிய பிறகு, வங்கி பரிவர்த்தனை முடிந்த பிறகு செல்ஃபோனிற்கு உறுதிசெய்வதற்கான குறுஞ்செய்தி வருவது போல் ஓட்டு போட்ட பிறகும் உறுதிசெய்யப்பட்ட குறுஞ்செய்தி வரவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது, பல்வேறு நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்தசூழலில் தேர்தலில் வாக்களித்ததை உறுதிசெய்யும் பொருட்டு அவரவரவர்களின் செல்போன் நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்று செய்யப்பட்டுள்ளது.
கே.ஆர். குகேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ரேஷன் பொருட்கள் வாங்கும்போதும், எரிவாயு சிலிண்டர் பதிவுசெய்யும் போதும், வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ளும்போதும் வெளிப்படைத்தன்மைக்கு பொறுப்பேற்கும் வகையில் உடனடியாக பயனாளரின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி வருவதை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், தன் வாக்கை பதிவுசெய்தவுடன் அதை உறுதிசெய்யும் வகையில், வாக்காளரின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி வரும் (vote confirmation sms) திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த யோசனையை பரிசீலித்துவருவதாக முதலில் கூறிய தேர்தல் ஆணையம், அதன்பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கே.ஆர்.குகேஷ் தன் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் மற்றும் கடந்த பிப்ரவரி மாதம் அளித்த மனுக்கள் மீது இந்திய தேர்தல் ஆணையமோ, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியோ எந்த நடவடிக்கையும் எடுக்காததால், உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.