திமுகவின் மதுரை வடக்கு தொகுதியில் ஒட்டப்பட்ட காங்கிரஸ் போஸ்டர் web
தமிழ்நாடு

‘உங்கள் ஓட்டு கை சின்னத்திற்கு..’ திமுக தொகுதியில் ஒட்டப்பட்ட காங்கிரஸ் போஸ்டர்!

திமுகவின் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை விமர்சித்த நிலையில், அவரின் மதுரை வடக்கு தொகுதில் உங்கள் ஓட்டு கை சின்னத்திற்கு என ஒட்டப்பட்ட காங்கிரஸ் போஸ்டர் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Rishan Vengai

மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டதால் திமுக-காங்கிரஸ் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. திமுக எம்எல்ஏ கோ.தளபதி காங்கிரஸ் கட்சியை விமர்சித்ததற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என கோரிக்கை வைப்பேன் என கூறியிருந்த நிலையில் இது நடந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து ’ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என தவெக தலைவர் விஜய் பற்றவைத்த தீ, இன்னும் திமுக-காங்கிரஸ் இடையே புகைச்சலை அணையாமல் வைத்துவருகிறது. தவெக தலைவர் விஜய் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என சொன்னபோதே காங்கிரஸ் கட்சியினரும் திமுகவிடம் எங்களுக்கும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

காங்கிரஸ், திமுக

இப்பிரச்னை பூதாகரமாக வெடிக்கும் நிலை ஏற்பட்டாலும், காங்கிரஸ் மேலிடம் அமைதியாகவே இருந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையும், இந்தவிவகாரத்தில் மேலிடம் என்ன சொல்கிறதோ அதையே பின்பற்றுவோம் என கூறியிருந்தார்.

இந்தசூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியையும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளையும் விமர்சித்து பேசியிருந்த திமுக மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கோ.தளபதி, மீண்டும் இவ்விவகாரத்தை பூதாகரமாக்கினார்.

திமுக தொகுதியில் காங்கிரஸ் போஸ்டர்..

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மதுரை மாநகர் திமுக மாவட்ட செயலாளரும், வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி, ”மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோர் இன்று அதில் பங்கு வேண்டும், இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இந்த தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என அவர்கள் நினைக்கிறார்கள். இவையெல்லாற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை ‘சீட்’டே கொடுக்கக்கூடாது. நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது. ஒரு தொகுதிக்கு 3000, 4000 ஓட்டு தான் இருக்கிறது. வார்டுகளில் ‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்” என கடுமையாக விமர்சித்திருந்தார்.

திமுக எம்எல்ஏ தளபதி - காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்

திமுக எம்எல்ஏவின் விமர்சனத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருந்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், ”இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புதலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது” என பதிவிட்டிருந்தார்.

இந்தசூழலில் தான் தற்போது மதுரை வடக்கு தொகுதி முழுவதிலும், ‘மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு உங்கள் ஓட்டு கை சின்னத்திற்கு’ என்ற போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் இவ்விவகாரம் குறித்து புதியதலைமுறையிடம் பேசிய மதுரை மாநகர் காங்கிரஸ் தலைவர் நல்லமணி, “காங்கிரஸ் கட்சி கண்ணியமான கட்டுப்பாட்டை மதிக்கும் அரசியல் இயக்கம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யார் இப்படி நடந்துகொண்டது என தெரியவில்லை, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.