தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது. ஆனால், திமுக தரபில் இருந்து கூட்டணி ஆட்சி என்பது கிடையாது என அறிவித்திருந்தாலும், காங்கிரஸ் நிர்வாகிகள் அக்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, அக்கட்சியின் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் பொதுவெளிகளில் கூட்டணி ஆட்சி என்றக் கோரிக்கையை தொடர்ந்து கூறிவருகிறார்.
இந்த சூழலில் தான், காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அமைச்சர்கள் உட்பட திமுகவினர் பலரும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன், “காங்கிரஸ் கட்சியில் ஒருவர் இருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறார்கள்” எனக் கடுமையாக விமர்சித்திருந்தது கூட்டணி கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதேசமயம், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொகுதிப்பங்கீடு குறித்துப் பேச குழு அமைக்க வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனாலும், இதுவரை தொகுதிப்பங்கீட்டுக்கான குழு அமைக்காமலேயே திமுக இருந்து வருகிறது. இவ்வாறு, திமுக - காங்கிரஸ் இடையே சமீபகாலமாக தொடர் முரண்பாடுகளே இருந்து வருகின்றன.
இந்நிலையில் தான், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் தவெக கூறியும் எந்தக் கட்சியும் கூட்டணியில் இணையாத நிலையில், காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்கு எதிர்பார்த்துக் காத்திருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் மத்திய தலைமை தொடர்ந்து, தமிழக காங்கிரஸாரை அழைத்து கூட்டணி குறித்து விவாதித்து வரும் நிலையில், காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா? எனவும் கேள்வி எழுந்து வருகிறது.
இந்நிலையில், இன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஆட்சியில் பங்கு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் வேளையில், இந்தக் கூட்டத்தில் பேசிய நிர்வாகி ஒருவர் பேசியிருப்பதும் பேசுபொருளாகியிருக்கிறது.
அந்த நிர்வாகி பேசும்போது, ”காங்கிரஸ் கட்சியைக் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். தவெகவிற்கு 30 சதவீத வாக்கு வங்கி இருக்கிறது. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தால் எளிதில் வெற்றி பெற்று விடாலம். ஆனால், நாம் திமுகவில் தான் இருக்கவேண்டும் என நினைக்கிறோம். அதேபோல, திமுகவிடம் மீண்டும் கூட்டணியில் பங்கு கேட்கிறோம். அவர்கள் தரவில்லை என்றால், வெற்றியோ தோல்வியோ விஜயுடன் கூட்டணியில் சென்றுவிடுவோம்” என வெளிப்படையாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் பேசுகையில், ”பல அமைச்சர் காங்கிரஸை சாதரணமாக பேசுகின்றனர். காங்கிரசுக்கு தன்மானம் தான் முக்கியம். மரியாதை கிடைக்காவிட்டால் திருப்பி அடிப்போம். காங்கிரஸ் கேட்பதெல்லாம் மரியாதையைத் தான். திமுக அமைச்சர்கள் பேசுவது வலியைத் தருகிறது. காங்கிரஸின் கீழ்நிலைத் தொண்டர்களுக்கும் மரியாதை கிடைக்க வேண்டும் என்பது தான் ராகுல் காந்தியின் விருப்பம்” எனப் பேசியுள்ளார்.
இவ்வாறு, தொடர்ச்சியாக திமுக காங்கிரஸ் இடையேயான முரண்பாடு அதிகரித்து வரும் வேளையில் இது, கூட்டணியில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.