1971 சட்டமன்றத் தேர்தல் | 2வது முறை முதல்வரான கலைஞர் கருணாநிதி.. இன்று வரை தொடரும் சாதனை என்ன?
1971 சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாடு சந்தித்த முதல் தேர்தல்... ஆம்... அதற்கு முன் நடந்திருந்த தேர்தல்கள் மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரில் இங்கே நடந்திருந்தது. 1969இல் மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றினார் அண்ணா. எனவே, மாநிலத்தின் பெயர் மாற்றத்திற்கு பின் நடந்த முதல் தேர்தலாக இது அமைந்தது. பதவிக்காலம் முடிய ஓராண்டு இருந்த நிலையில், அதற்கு முன்பே சட்டமன்றத்தை கலைத்து தேர்தலை எதிர்கொண்டார் முதல்வர் மு. கருணாநிதி.
காங்கிரஸ் கட்சி இந்திரா மற்றும் காமராஜர் தலைமையில் இரண்டாக உடைந்திருந்தது. இந்திரா தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்தது. காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ், ராஜாஜியின் சுதந்திரா கட்சி உள்ளிட்டவை இணைந்து எதிர்த்தரப்பில் போட்டியிட்டன. முந்தைய இரு தேர்தல்களிலும் காங்கிரஸை ஆதரித்து பரப்புரை செய்த தந்தை பெரியார் இம்முறை திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இத்தேர்தலில் திமுக பிரம்மாண்ட வெற்றியை ஈட்டியது, திமுக 48.58% வாக்குகளுடன் 184 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் ஒரு தேர்தலில் ஒரு கட்சி இவ்வளவு அதிக இடங்களையும் இவ்வளவு அதிக வாக்கு சதவீதத்தையும் பெற்றது இதுவே முதல்முறை. இச்சாதனை இன்றளவும் நீடிக்கிறது. முதல்வர் மு.கருணாநிதி சைதாப்பேட்டையிலும் எம்.ஜி.ஆர் பரங்கிமலை தொகுதியிலும் வெற்றிபெற்றனர். நெடுஞ்செழியன் திருவல்லிக்கேணியில் வெற்றிபெற்ற நிலையில் துரைமுருகன் காட்பாடியில் வென்று சட்டமன்ற பயணத்தை தொடங்கினார். மு.கருணாநிதி 2ஆவது முறையாக முதல்வர் ஆனார்.

