சென்னையில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி என குற்றஞ்சாட்டப்பட்ட திமுக தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர் தனசேகரின் பேரன் கைது செய்யப்பட்டார். கட்டப்பஞ்சாயத்து பேசிய திமுக நிர்வாகியின் பேரனை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் பள்ளி சாலையில் இருந்து பார்க் சாலை நோக்கி சென்ற ஸ்கூட்டி ஒன்றின் மீது கடந்த திங்கள்கிழமை இரவு சொகுசு கார் மோதியது. இந்த விபத்தில் நித்தின் சாய் என்ற 21 வயதான கல்லூரி மாணவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மாணவர் அபிஷேக் படுகாயமடைந்தார். தகவலறிந்து சென்ற போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நித்தின் சாய் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த அபிஷேக்கும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நித்தின் சாயின் பெற்றோர் தனது மகன் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பின்னரே வழக்கின் திசை மாறியது.
விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது இது கொலை என்பது உறுதியானது. ஸ்கூட்டி மீது அதிவேகமாக காரை ஏற்றிய நபர், விபத்தில் தூக்கி எறியப்பட்டவர்கள் மீது மீண்டும் காரை ஏற்றியதும், அவர்களை எச்சரித்து சென்றதும் சிசிடிவியில் பதிவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து வழக்கு குற்றப்பிரிவு போலீசார் வசம் சென்றது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
வழக்குப்பதிவு செய்தவர்களின் பட்டியலில் திமுக தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர் கே.கே.தனசேகரனின் பேரன் சந்துரு பெயரும் இடம்பெற்றது. விசாரணையில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவரை வெங்கடேஷ் என்ற கல்லூரி மாணவரும், பிரணவ் என்பவரும் ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. தனக்கு வெங்கடேஷ் தொல்லை கொடுப்பதாக பிரணவ்விடம் மாணவி புகார் செய்த நிலையில், பிரணவ் தனது கல்லூரி சீனியரும், தனசேகரனின் பேரனுமான சந்துருவிடம் இந்த விஷயத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் திங்கள்கிழமை நடந்த பிறந்தநாள் கொண்டாட்ட விழாவிற்கு வெங்கடேஷ் சென்றுள்ளார். அங்கு சந்துரு மற்றும் அவரது நண்பர்கள் வெங்கடேஷை மிரட்டி தாக்கியுள்ளனர். இதைக் கண்ட வெங்கடேஷின் நண்பர்களான அபிஷேக்கும், சாயும் அவருக்கு ஆதரவாக நின்றதுடன் சந்துருவின் காரை சேதப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றுள்ளனர். இந்நிலையில் அபிஷேக்கும், சாயும் ஸ்கூட்டியில் சென்றபோது, அவர்களை பின் தொடர்ந்து சென்ற சந்துரு மற்றும் அவரது நண்பர்கள் காரை வைத்து ஸ்கூட்டி மீது மோதினர்.
மகனின் இறப்புக்கு நீதி கோரி உயிரிழந்த நித்தின் சாயின் உறவினர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டியது சந்துருவின் நண்பர் என தெரியவந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சந்துருவும் கைது செய்யப்பட்டார்.