தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்.. அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் அடுத்தடுத்து கைது செய்திருப்பது, மீனவ கிராமத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற 5 மீனவர்களை, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களுக்கு வரும் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே,மேலும் 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
பாம்பன்மீன்பிடி துறைமுகத்திலிருந்து சென்ற 9 மீனவர்களை புத்தளம் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதனிடையே, கைது செய்யப்பட்ட மீனவர்களையும்,படகுகளையும் விடுவிக்க வேண்டும் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனுஷ்கோடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தங்கச்சிமடம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்களுடன் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க, உரிய தூதரக நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தனது கடிதத்தில் அவர், இம்மாதத்தில் மட்டும் நான்காவது முறையாக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது 68 மீனவர்கள் இலங்கை காவலில் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.