8 பேர் பணி இடைநீக்கம் Pt web
தமிழ்நாடு

கோவை கோனியம்மன் கோவிலில் 8 பேர் சஸ்பெண்ட்.. அமைச்சர் ரமேஷ் உத்தரவு!!

கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை திருடிய வழக்கில் சம்பத்தப்பட்ட 4 பேர் உட்பட 8 பேரை பணி இடைநீக்கம் செய்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Premkumar S

கோவை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது கோனியம்மன் கோவில். இந்த கோவிலில் 9 இடங்களில் நிரந்தர உண்டியல்களும், 7 இடங்களில் தற்காலிக உண்டியல்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த 15 ஆம் தேதி இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் எண்ணப்பட்டது. இதில் ஒரு உண்டியலை மட்டும் ஊழியர்கள் தனியாக எடுத்து வைத்து அதில் இருந்த பணத்தை திருடியுள்ளனர். இதை பார்த்த பக்தர் ஒருவர் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக புகார் அளித்தார்.

வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்

இதனையடுத்து கோவையில் உள்ள இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கோவில் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது , ஒரு உண்டியலை எண்ணாமல் அதில் இருந்த 30 ஆயிரம் பணத்தை எடுத்து வைத்துக்கொண்டது தெரியவந்தது. மேலும், கோவில் பூசாரி உட்பட 4 பேரும் கூட்டு சேர்த்து திருடி இருப்பது உறுதியானது. இதனையடுத்து இந்து சமய அறநிலைய துறை சார்பில் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, கோனியம்மன் கோவிலில் பணிபுரியும் பாலசுப்பிரமணியன், சரவணன், பிரதீப் குமார், கோயில் பூசாரி கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேரை கைது செய்து உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உண்டியலில் இருந்த 30 ஆயிரம் பணத்தை திருடு 4 பேரும் பங்கு போட்டுக்கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் ரமேஷ்

இந்தசூழலில் தான், இந்த வழக்கில் சம்பத்தப்பட்டுள்ள 4 ஊழியர்கள் மற்றும் அதை கண்டுபிடிக்காத ராம்குமார், உதயகுமார், குமார், உஷா நந்தினி ஆகிய 4 அதிகாரிகள் என 8 பேரை பணி இடைநீக்கம் செய்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மனின் உண்டியல் பணத்தை பூசாரி உட்பட கோவில் ஊழியர்களே திருடி இருப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.