திருவண்ணாமலை | மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை.. ஒரே பள்ளியில் 2 ஆசிரியர்கள் கைது!
பெற்றோர்கள் நம்பிக்கையுடன் பிள்ளைகளை அனுப்பும் வேடவந்தவாடி நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் ரவி மற்றும் ஆசிரியர் முரளிதரன் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் நல அலுவலர் மற்றும் காவல்துறை விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை அனுப்பப்பட்டனர்.
திருவண்ணாமலை அடுத்த வேடவந்தவாடி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ரவி (58). அதே பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்நது வருபவர் முரளிதரன்(42). இவர்கள் இருவரும் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்து வருவதாக குழந்தைகள் உதவி மையம் எண் 1098-க்கு புகார் வரப்பெற்றது.
அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் காவல்துறை உதவியோடு பள்ளிக்கு நேரில் சென்று பல்வேறு பிள்ளைகளிடம் தனித்தனியாக விசாரணை செய்ததில் இருவரும் தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்தது உறுதி செய்யப்பட்டு திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள் இருவரும் இன்று திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆசிரியர்களை நம்பி பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கும் சூழ்நிலையில், இரண்டு ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தது திருவண்ணாமலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

