செய்தியாளர்: சேது மாதவன்
கோவை மாவட்டம் வால்பாறை அருகே நேற்று மாலை ஜார்கண்ட் மாநில தொழிலாளர் ஒருவரின் குழந்தை ரோஷினி குமாரி (6) என்ற சிறுமியை சிறுத்தை தாக்கி இழுத்துச் சென்றது. இது தொடர்பாக நேற்று இரவு முதல் காவல்துறையினரும் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அதிகாலை மூன்று மணி வரை சிறுமியின் உடலை தேடினர்.
இதையடுத்து உடல் கிடைக்காத நிலையில், காலை 7 மணிக்கு கோவை மாவட்டத்தில் இருந்து காவல்துறை சார்பாக மோப்ப நாய் மற்றும் வனத்துறை சார்பாக ஒரு நாயும் கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டு மோப்ப நாய்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
இந்நிலையில், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் சிறுமியின் உடலை சிறுத்தை இழுத்துச் சென்று வனப்பகுதியில் வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அங்கு சென்ற வனத்துறையினர் சிறுமியை சடலமாக மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைத்துள்ளனர்.
இந்நிலையில், வனத்துறையினர் சார்பாக ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உள்ள நிலையில், முதல் கட்டமாக 50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.