அருப்புக்கோட்டையில் பயங்கரம்| குடும்ப பிரச்னையில் மனைவி, 2 குழந்தைகளை கொலை செய்த நபர்!
செய்தியாளர்: நவநீத கணேஷ்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரவேலு. விவசாயம் செய்து வரும் இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும் ஜெயதுர்கா, ஜெயலட்சுமி என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை விவசாயி சுந்தரவேலு, தனது மனைவி பூங்கொடி மற்றும் ஜெயதுர்கா, ஜெயலட்சுமி இரண்டு குழந்தைகளையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தாலுகா காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து கொலை செய்யப்பட்ட உடலை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி கண்ணன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடிக்கடி மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்தது தெரியவந்தது.