அரிட்டாப்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் X Page
தமிழ்நாடு

“உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்; எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள்” - அரிட்டாப்பட்டியில் முதல்வர்

“எது எப்படியிருந்தாலும், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே, எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்” - என அரிட்டாப்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.

PT WEB

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை மேலூர் பகுதியை உள்ளடக்கிய நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டியை உள்ளக்கிய 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமத்தை எடுப்பதற்கு ஆய்வுடன் கூடிய, சுரங்க உரிம குத்தகைக்கு மத்திய சுரங்க அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏல அறிவிப்பை வெளியிட்டது. இந்த உரிமத்தை வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் பெற்றது.

அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்

ஏற்கனவே அரிட்டாபட்டியை பல்லுயிர் பெருக்க மண்டலமாக தமிழ்நாடு அரசு கடந்த 2022-ம் ஆண்டு அறிவித்திருந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், “டங்ஸ்டன் திட்டத்தால் அரிட்டாபட்டி பல்லுயிர்ப் பெருக்க மண்டலத்துக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, தமிழர் கல்வெட்டுகள், சமணர் படுகைகள், குடவரைக் கோவில்கள் போன்ற பண்பாட்டு, கலாசார அம்சங்களுக்கும் பாதிப்பு ஏற்படும்” எனக்கூறி டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அரிட்டாப்பட்டி, நாயகர்பட்டி, வல்லாளபட்டி, கிடாரிபட்டி, எட்டிமங்கலம் உள்ளிட்ட 48க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை அரசுக்கு தெரியப்படுத்தும் விதமாக அவர்கள் அனைவரும் இணைந்து 70 நாட்களுக்கும் மேலாக திட்டத்தை கைவிட வேண்டும் என கடுமையான தொடர் போராட்டங்களை நடத்தினர்.

தொடர்ந்து 50 கிராம மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசும், மத்திய அரசை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் 29-ந்தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மேலும் மேலூர் மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 9-ந்தேதி தமிழ்நாடு சட்டசபையில் டங்ஸ்டன் கனிமச்சுரங்க திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி தனித்தீர்மானமும் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு முற்றிலும் ரத்து செய்யக்கோரி முல்லைப்பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஜனவரி 7ம் தேதி 20 கிலோமீட்டர் தூர பிரம்மாண்ட நடை பயண பேரணியை நடத்தினர்.

இதனையடுத்து கனிமசுரங்கத்துறை மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியை மேலூர் பகுதி பிரதிநிதிகள் சந்திக்க தமிழக பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு டெல்லியில் மத்திய அமைச்சரை சந்தித்து டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை விடுத்தனர்.

டங்ஸ்டன் சுரங்கம் - மத்திய அமைச்சரை சந்திக்க பாஜக அழைத்துச் சென்ற கிராம மக்கள்

இதனைத்தொடர்ந்து கடந்த 24ம் தேதி டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றி உறுதியான நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், திட்டம் ரத்து செய்யப்பட்ட மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வகையில் அரிட்டாபட்டி மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விழாவை இன்று நடத்தினர்.

முன்னதாக அரிட்டாபட்டி மக்கள் ஆட்டம் பாட்டம் மற்றும் கும்மிப்பாட்டு பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் அமைச்சர்கள் மூர்த்தி, ஐ.பெரியசாமி, பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிராம மக்கள் அணிவித்த சால்வையை முதல்வர் பெற்றுக்கொண்டார்.

அரிட்டாபட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா

தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மேடையில் பேசுகையில்,

“நான் திடீரென வந்தற்கு காரணம் உங்களுக்கு தெரியும். அமைச்சர் மூர்த்தி தலைமையில் அரிட்டாபட்டி விவசாயிகள், பிரதிநிதிகள் நேற்று என்னை சந்தித்தனர். ஒன்றிய அரசுக்கு எதிராக அரிட்டாபட்டி மக்கள் எப்படி அழுத்தம் கொடுத்தார்கள் என எனக்கு நன்றாக தெரியும். உங்களில் ஒருவனாக உள்ள முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பேசினார்கள். சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இத்திட்டம் ரத்தாகி உள்ளது. சட்டமன்றத்தில் எல்லா கட்சிகளும் ஒன்றிணந்து டங்ஸ்டன் தீர்மானத்தை நிறைவேற்றி கொடுத்தார்கள். அதிமுக, பாமக, சிபிஎம், விசிக என எல்லோரும் ஆதரவளித்தனர். மக்களால் ஆட்சியில் இருக்கும் நான் முதல்வர் பொறுப்பில் இருக்கும் வரை டங்ஸ்டன் வராது என்றேன். ஒருவேளை வந்தால் பதவியில் இருக்க மாட்டேன் என்றேன்.

எனக்கு நன்றி சொல்ல வேண்டும் என பெரியவர்கள் அழைத்தார்கள். எனக்கு பாராட்டு, நன்றி, வாழ்த்து சொல்வதை விட உங்களுக்கு... அதாவது விவசாயிகளுக்குதான் பாராட்டு நன்றி சொல்ல வேண்டும். நான் அதிகமாக பேச விரும்பவில்லை. நான் பிரித்து பேசவில்லை. வெற்றி நமக்கு கிடைத்துள்ளது.

அரிட்டாபட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா

மீண்டும் ஒருமுறை உங்களை சந்திக்க வருவேன். ஒன்றரை ஆண்டில் தேர்தல் வரவுள்ளது. அந்த தேர்தலில் என்ன முடிவில் நீங்கள் இருப்பீர்கள் என எனக்கு தெரியும். உங்கள் வீட்டுப் பிள்ளை எனக்கு ஆதரவு தாருங்கள். எப்போதும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பேன். அண்ணா, கலைஞர், பெரியார் வழியில் திராவிட மாடல் அரசு உள்ளது. எது எப்படியிருந்தாலும், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே, எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள் உங்கள் வீட்டுப்பிள்ளை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி நடக்கிறது. உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம்” என பேசினார்.

தொடர்ந்து கிராம மக்களிடம் மனுக்களை முதலமைச்சர் பெற்றுக்கொண்டார். அரிட்டாபட்டி நிகழ்ச்சியில் அய்யங்காளை என்பவரது ஆண்குழந்தைக்கு வெற்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.