“மத்திய அமைச்சரை சந்திக்க செல்பவர்கள் எங்கள் சங்கத்தை சேர்ந்தவர்களே அல்ல” - விவசாய சங்கத்தினர்!
செய்தியாளர்: சுபாஷ்
மேலூரை சேர்ந்த ஏழு விவசாயிகள், டெல்லியில் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிசான் ரெட்டியை நேரில் சந்தித்து, “மேலூரில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அறிக்கை வெளியிட வேண்டும்” என்ற கோரிக்கை வைப்பதற்காக நேற்று (ஜனவரி 22) புறப்பட்டனர். அப்போது வந்தவர்களுடன் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் உட்பட பல நிர்வாகிகள் இருந்தனர். அனைவரும் மதுரையிலிருந்து நேற்று டெல்லி புறப்பட்டனர்.
அப்போது, விமான நிலையத்திற்கு வந்த மேலூர் விவசாயிகள் சிலர், “டங்ஸ்டன் போராட்டத்தை நடத்தியது நாங்கள்தான். ஆனால், வேறு சிலரை பாஜகவினர் போராடக்காரர்கள் என அழைத்துச் செல்கின்றனர்” என பகீர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
இதுகுறித்து விவசாயி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவிக்கையில், “டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக கடந்த 65 நாட்களாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டம் நடத்தினோம். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேலூர் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்தார்.
அப்போது, விவசாய சங்கத்தை சேர்ந்தவர்களை அழைத்து ‘மத்திய சுரங்கத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நீங்கள் கோரிக்கை வைக்கலாம். அதற்காக நாங்கள் உங்களை டெல்லிக்கு அழைத்து செல்கிறோம்’ என தெரிவித்தார். நாங்களும் அவர் கூறிய வார்த்தையை நம்பி பொங்கல் வேலைகளை பார்த்தோம். ஆனால், இப்போது இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாத யாரோ 10 நபர்களை அழைத்து கொண்டு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் டெல்லி செல்கிறார்கள்.
அவர்களுக்கும் போராடிய விவசாயிகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவர்கள் செல்வதால் எங்களுக்கு மற்றற்ற மகிழ்ச்சிதான். பிரதமர் நல்ல தீர்ப்பை வழங்கி அவர்களை அனுப்பி வைத்தால் நல்லது. அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.
ஆனால், தவறானவர்கள் சென்று, எந்தவொரு தீர்வும் வராமல் போனால், அதை எதிர்க்கவும் எதிர்கொள்ளவும் எந்தவிதத்திலும் தயங்க மாட்டோம். தமிழகம் எங்கும் போராட்டம் கொந்தளிக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன். இது சதித்திட்ட செயலாக இருக்கும் என்று பயந்துதான், டெல்லி செல்பவர்களிடம் கேட்ட வதோம்.. அதற்குள் அவர்கள் சென்றுவிட்டனர். இதில் போராடிய முக்கியமான நபர்கள் யாரும் இதில் பங்கேற்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.