ஸ்டாலின் pt desk
தமிழ்நாடு

"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு வீழாது!" - முதல்வர்

தமிழரின் பண்பாட்டை எடுத்துக்காட்டும் மதுரை மண்ணில், தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு தேவையான முடிவுகளை எடுக்கவும, இங்கு கூடியிருக்கும் உங்களை பார்க்கும்போது, புது எனர்ஜி வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

PT WEB

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு:

இன்றைக்கு தமிழ்நாட்டு உரிமைகளை நிலைநாட்ட உயர பறப்பது, நம்முடைய கருப்பு சிவப்புக் கொடி! இந்தக் கொடி எத்தனை போராட்டங்களுக்கு பிறகு - எத்தனை எத்தனை தியாகங்களுக்குப் பிறகு - விண்ணுயர பறக்கிறது என்பதற்கு, தலைவர் கலைஞர் அவர்கள் மதுரை மேலமாசி வீதியில் பேசியதை நினைவூட்ட விரும்புறேன்... 'மதுரை மண்டலத்தில் தி.மு.க.வை வளர்க்க நானும் - மதுரை முத்துவும் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல! 1949-ஆம் ஆண்டு உருவான இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக, மதுரையில் 100 இடங்களில் கொடியேற்றுவது என்று நானும், மதுரை முத்துவும் திட்டமிட்டு கொடி ஏற்றினோம்.

அப்படி அந்தக் கொடியை ஏற்றும்போது கொடியின் கயிற்றை எடுத்து என்னிடம் முத்து கொடுப்பார். கொடியை ஏற்றும்போதே அந்தக் கயிற்றின் மீது அரிவாள், கத்தி வந்து விழும். அதில் அந்தக் கயிறு அறுந்து விழும். அப்போது, என் கையிலும், முத்துவின் கையிலும் ரத்தம் கொட்டும். அந்த ரத்தத்தைத் துண்டில் ஏந்தியபடி தொண்டர்கள் எங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். அத்துடன் கொடியேற்றும் நிகழ்ச்சி முடிந்துவிடாது. அடுத்த கொடியை ஏற்றுவோம். இப்படி அடுத்தடுத்து கொடிகளை ஏற்றியதால் இன்று விண்முட்ட கழகக் கொடிகளை காண முடிகிறது' என்று தலைவர் கலைஞர் பேசினார்.

மதுரையில் நடைபெறும் 7வது பொதுக்குழு இது:

இப்படி கழகத்துக்காக பலர் உழைத்த தியாக பூமியான மதுரை மண்ணில், கழகப் பொதுக்குழு நடப்பதை பெருமையாக கருதுகிறேன். கழகம் தொடங்கியதில் இருந்து, மதுரையில் ஆறு பொதுக்குழு நடைபெற்றிருக்கிறது. இது ஏழாவது பொதுக்குழு! ஏழாவது முறை கழகம் ஆட்சியமைக்க அடிகோலும் பொதுக்குழுதான் இது! கழகத்தின் தொண்டனாக செயல்பட்டு வந்த, என் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியை வழிநடத்தும் வாய்ப்பை பெற்றதும் இதே மதுரையில் இருக்கும் ஜான்சி ராணி பூங்காவில்தான்!

சித்திரைத் திருவிழா நடக்கும் நகரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முத்திரைத் திருவிழாவாக நம்முடைய பொதுக்குழுவை நடத்திக் கொண்டு இருக்கிறோம். அந்தக் காலத்தில் எந்த ஊருக்குச் சென்றாலும் நம்முடைய கொடி பறக்கிறதா என்று என் கண்கள் தேடும். தமிழ்நாட்டில் அத்தனை ஊரிலும், அத்தனை நகரத்திலும் அதிகக் கொடி ஏற்றிய கை, இந்த ஸ்டாலினின் கை. திராவிட முன்னேற்றக் கழகம் வழக்கமான அரசியல் கட்சி அல்ல! வரலாற்றில் எத்தனையோ அரசியல் கட்சிகள் வரும், போகும்! ஆனால், கொள்கைக்காக தோன்றி, லட்சியத்துக்காக தியாகங்கள் செய்து, மக்களின் ஆதரவை பெற்ற அரசியல் இயக்கம்,

நான் மமதையில் பேசுகிறவன் அல்ல:

நாம்! கொள்கையை பரப்ப கட்சியும் - கொள்கையை வென்றெடுக்க ஆட்சியும் தேவை என்று உழைப்பவர்கள் நாம்! தடம் மாறாத கொள்கைக் கூட்டம் நாம்! அதனால்தான் எந்த கோமாளிக் கூட்டத்தாரும் நம்மை வெல்ல முடியவில்லை இனியும் வெல்ல முடியாது! இது வழக்கமான பொதுக்குழு அல்ல... ஏழாவது முறையாக வாகை சூட வியூகம் வகுக்கும் பொதுக்குழு! உங்களுக்கே தெரியும், நான் மமதையில் பேசுகிறவன் அல்ல. 'கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை' என்று ஆணவக் குரலில் சொல்பவன் அல்ல! எந்தக் காலத்திலும் எனக்கு ஆணவமோ, மமதையோ வராது. என்னைப் பொறுத்தவரைக்கும், பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம்!

பா.ஜ.க. கூட்டணி ஆட்சியால், அதல பாதாளத்துக்குச் சென்ற தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம்:

தி.மு.க.வுக்கு என்றைக்கும் ஊடக சொகுசு இருந்ததில்லை. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகம் மேல்தான் அதிக விமர்சனங்கள் குவியும். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு எதிரான அலையைவிட, ஆதரவு அலைதான் அதிகமாக வீசுகிறது. அது வெளியே தெரியாமல் மறைக்க - திசை திருப்ப சிலர் நினைக்கிறார்கள். கடந்த அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி ஆட்சியால், அதல பாதாளத்துக்குச் சென்ற தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம். ஒன்றிய பா.ஜ.க. அரசு, நம்முடைய உரிமைகளுக்கு எதிராக எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அத்தனையையும் எதிர்த்து இன்றுவரை போராடி வருகிறோம். நமக்கு நியாயமாக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல், தமிழ்நாட்டை பொருளாதார ரீதியாக முடக்க நினைத்தாலும், அந்த நெருக்கடிகள் அனைத்தையும் கடந்து, மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

மக்கள் மனதில் பொய்யை விதைக்க முயற்சிப்பார்கள்:

2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கிறது. அதனால், வழக்கத்தை விட அதிகமாக, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக - கழக ஆட்சிக்கு எதிரா, அவதூறு அம்புகளை மக்கள் மத்தியில் எதிராளிகள் வீசுவார்கள். கருத்துக் கணிப்பு என்ற பெயரில் மக்கள் மனதில் பொய்யை விதைக்க முயற்சிப்பார்கள். சமூக ஊடகங்கள் மூலமும், விதைப்பார்கள். இதையெல்லாம் முறியடிக்க நாம் தயாராக வேண்டும். அவர்கள் ஒரு நேரேட்டிவ் செட் செய்ய நினைத்தால், நாம் அவர்களைவிட ஒரு படி முன்னால் இருக்க வேண்டும். அவர்களின் பொய்களுக்கு முன்னால், நம்முடைய உண்மை மக்களிடம் சென்று சேர வேண்டும். உங்களை வாழ வைத்த கழகத்தை நீங்கள் வாழ வையுங்கள்! இந்த இயக்கத்துக்கு உண்மையாக இருங்கள்! இதுதான் என்னுடைய பணிவான வேண்டுகோள்.

நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான காரணங்களில் ஒன்று, நம்முடைய கூட்டணி!

நான் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான காரணங்களில் ஒன்று, நம்முடைய கூட்டணி! 2017-ஆம் ஆண்டு முரசொலி பவள விழாவில் நம்முடைய பயணம் தொடங்கியது. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே ஒரு கூட்டணி இத்தனை தேர்தல்களுக்கு தொடர்ந்ததாக வரலாறு இல்லை. நம்முடைய வெற்றிக் கூட்டணி வலுவாக தொடர்கிறது என்றால் அதுக்குக் காரணம், நம்முடைய கூட்டணி தோழர்களை நாம் மதித்து செயல்படுவதுதான். நம்முடைய கூட்டணித் தலைவர்களிடம் நான் எப்படி நட்போடும் பாச உணர்வோடும் பழகுகிறேனோ, நீங்களும் அதே உணர்வோடு கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து செயலாற்ற வேண்டும். சில இடங்களில் முரண்கள் இருந்தாலும், பேசி - விட்டுக் கொடுத்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் நம்முடைய வெற்றிப் பயணத்தை தொடர முடியும்!

எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பழனிசாமி நம்முடைய கூட்டணி பிரிய வேண்டும் என்று நினைத்தார். அதுக்காக, என்னென்ன கதைகளையோ உருவாக்கினார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.வுடன் பிரிந்த மாதிரி நடித்தால், நம்முடைய கூட்டணி உடையும் என்று நினைத்தார்கள்! ஆனால், அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை. அதனால்தான், இப்போது டெல்லிக்குச் சென்று, பல கார்களில் மாறிமாறி, அமித்ஷாவை சந்தித்து, மீண்டும் பா.ஜ.க.விடம் சரணடைந்துவிட்டார். அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை அமித்ஷா அறிவித்தபோது ஒரு வார்த்தைகூட பேசாமல், பவ்யமாக பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். நாம் கேட்பது... ஒரு மாநிலத்தில், ஒரு கூட்டணிக்கு யார் தலைமை வகிக்கிறார்களோ, அவர்கள்தான் கூட்டணியை அறிவிப்பார்கள்! ஆனால், இங்கு அமித்ஷா அறிவிக்கிறார். இதிலிருந்தே இவர்கள் லட்சணத்தை நாம் புரிந்து கொள்ளலாம்!

தமிழ்நாட்டையும் பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்லத்தான் பழனிசாமி துடிக்கிறார்:

ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்கு சென்றிருக்கிறது அ.தி.மு.க! அடுத்து, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்லத்தான் பழனிசாமி துடிக்கிறார். அதனால்தான் அமித்ஷா இங்கு அடிக்கடி வருகிறார்! நான் ஏற்கனவே சொன்னதுதான், மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன், எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. பா.ஜ.க. கூட்டணி ஆட்சி வந்தால், தமிழ்நாட்டை என்ன செய்வார்கள் என்று சொல்ல வேண்டும். மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக்கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்கவிட மாட்டார்கள். தமிழ்நாட்டின் தனித்துவத்தையே அழித்திவிடுவார்கள் என்று மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, புதிதாக சிலர் 'நாங்கள்தான் மாற்று' என்று இளைஞர்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களுக்கும் பதிலடி தர வேண்டும்.

எந்தளவுக்கு இளைஞர்களுக்கு இடம் கொடுக்கிறீர்களோ, அந்தளவுக்கு கழகத்தில் புது ரத்தம் பாயும்:

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இப்போது 23 அணிகள் இருக்கிறது. புதிதாக இரண்டு அணிகள் இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது! இதில், பெரும்பாலான அளவில், நிர்வாகிகள் போடப்பட்டிருக்கிறார்கள். இன்னும் நிரப்பப்படாத பொறுப்புகளில் இளைஞர்களை நியமனம் செய்யுங்கள்! அணிகள் அனைத்துமே, தாய் கழகத்திற்கு வலு சேர்க்கத்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் இளைஞர்களுக்கு வாய்ப்பைக் கொடுங்கள். எந்தளவுக்கு இளைஞர்களுக்கு இடம் கொடுக்கிறீர்களோ, அந்தளவுக்கு கழகத்தில் புது ரத்தம் பாயும். செயல்பாடுகள் வேகமாக இருக்கும். வெற்றி உறுதி செய்யப்படும். முதல் இரண்டு மாதங்களுக்கு, உங்களுடைய முதல் பணி என்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை. 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறோம்.

பா.ஜ.க.விடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றும் கட்சி கட்டமைப்பும், கொள்கை பிடிப்பும், வலிமையான தலைமையும், நம்மிடம் மட்டும்தான் இருக்கிறது என்று தமிழ்நாட்டில் இருக்கும் சின்ன குழந்தைக்குக் கூட தெரிந்திருக்கிறது. ஆனால், தேர்தல் வெற்றிக்கு இதுமட்டும் போதாது! பூத் அளவில் வெற்றி பெறும் வாக்குகள்தான் தொகுதியில் வெற்றிபெற வைக்கும். தொகுதிகளை வென்றால்தான் ஆட்சி! அதனால், பூத் அளவிலான மைக்ரோ மேனேஜ்மெண்டும் மிக முக்கியம். ஜூன் முதல் வாரத்தில் இருந்து, என்னுடைய பணி என்ன என்றால், கழக நிர்வாகிகளை தொகுதி வாரியாக, அண்ணா அறிவாலயத்தில் நான் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரைவாக, ஒன் டூ ஒன் பேசுவோம்.

நான் அரசியல் – அரசியல், உழைப்பு, உழைப்பு என்று வளர்ந்தவன்:

எனக்குத் தெரிந்தது, அரசியல் மட்டும்தான். தலைவர் கலைஞராக இருந்தால், கவிதை எழுதுவார்; கதைகள் எழுதுவார்; சினிமா வசனம் எழுதுவார்; இலக்கிய மேடைகளில் கலக்குவார். ஆனால், நான் அரசியல் – அரசியல், உழைப்பு, உழைப்பு என்று வளர்ந்தவன். டிவி பார்த்தால் கூட, நியூஸ் சேனல்தான் பார்ப்பேன். சோசியல் மீடியாவை பார்த்தாலும், அரசியல் செய்திகள், பேட்டிகளைத்தான் பார்ப்பேன். உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது, அந்த வெற்றிச் செய்தியை மட்டும்தான். நான் கொடுத்த பொறுப்பை, சரியா செய்து அந்த வெற்றிச் செய்தியை தாருங்கள் என்பதுதான் என்னுடைய இந்தப் பொதுக்குழு செய்தி!

திராவிட முன்னேற்ற கழகம் இருக்கும் வரை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.