திமுகவுக்கு நன்றி... அதிமுகவுக்கு மவுனம்.. - பிரேமலதா வைக்கும் ட்விஸ்ட் என்ன?
செய்தியாளர்: ஆனந்தன்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...
முதலவர் ஸ்டாலின் மற்றும் திமுகவுக்கும் நன்றி:
திமுக செயற்குழு, பொதுக்குழுவில் எங்களின் தெய்வம் கேப்டனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதலவர் ஸ்டாலின் மற்றும் திமுகவுக்கும் நன்றி. நாங்கள் என்றைக்கும் இதனை மறக்க மாட்டோம்.
இன்று ராஜ்யசபா சீட் 2026-ல் கொடுக்கப்படும் என அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. 2024 பாராளுமன்றத் தேர்தலின் போதே 5 எம்பி சீட்டுகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டை உறுதி செய்யப்பட்டது. அண்ணன் எடப்பாடி முத்த முன்னாள் அமைச்சர்களுடன் இருந்து வாய்வழி மட்டும் அல்ல, எழுதுப் பூர்வமாகவும் உறுதி அளித்தனர்.
அன்புமணி, ஜிகே.வாசனுக்கு அதிமுக தரப்பில் ராஜ்யசபா சீட் தரப்பட்டுள்ளது:
அதிமுக அறிவிக்க வேண்டிய இடத்தில் இருப்பதால் தான் நாங்கள் அமைதியாக இருந்தோம். ஏற்கனவே அன்புமணி, ஜிகே.வாசனுக்கு அதிமுக தரப்பில் ராஜ்யசபா சீட் தரப்பட்டுள்ளது. இந்த முறை தேமுதிகவுக்கு என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. அன்றே கடிதம் வாயிலாக கையெழுத்து போட்டுக் கொடுத்தார்கள் அறிவிப்பது அவர்களின் கடமை என்று கூறினோம்... இன்று அவர்களின் கடமையை ஆற்றியுள்ளனர்.
தேர்தலை ஒட்டி எங்களின் கடமையையும் ஆற்றுவோம்
அரசியல் என்பது தேர்தலை ஒட்டியது தான். 2026 தேர்தலை ஓட்டிதான் ராஜ்யசபா சீட் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கடமையை ஆற்றியுள்ளனர். தேர்தலை ஒட்டி எங்களின் கடமையையும் ஆற்றுவோம். 2024 தேர்தலின் போதே எழுதி தரப்பட்டதும் உண்மைதான். எழுத்துப்பூர்வமாக கொடுத்ததில் வருடம் குறிப்பிடவில்லை. வருடம் ஏன் குறிப்பிடவில்லை என்று கேட்டதற்கு... வழக்கமாக வருடம் குறிப்பிட மாட்டோம் ஆனால், உறுதியாக சீட் தருகிறோம் என்று சொன்னார்கள்.
திமுக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்கிறோம்:
ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்த நிலைபாட்டை முடிவு செய்வோம். அடுத்த 6 மாதம் தேர்தலை நோக்கி எங்கள் பயணம் இருக்கும். அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிப்பதாக அவர்கள் கூறியது குறித்து அவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.
திமுக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்கிறோம். தேர்தலையொட்டியை அதிமுக ராஜ்யசபா சீட்டை ஒதுக்கி உள்ளது. அவர்களின் முடிவை அறிவித்துள்ளார்கள். அதேபோல எங்களின் நகர்வும் தேர்தலை ஒட்டித்தான் தான் இருக்கும்” என்றார்.