தேமுதிக, 15 ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் இருந்து, திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின், விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிகவின் இணைப்பை வரவேற்று, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக இணைந்து பயணிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றியை உரிதாக்க வேண்டும் என வியூகங்களை வகுத்துவரும் திராவிட முன்னேற்ற கழகம், 15 ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவை தட்டிப்பறித்துள்ளது.
2005ஆம் ஆண்டு தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவெடுத்த விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம், 2011ஆம் ஆண்டு சட்டமன்ற எதிர்கட்சியாக மாறி திமுகவை பின்னுக்கு தள்ளியது. அப்போதிலிருந்து தற்போது வரை அதிமுக கூட்டணியில் இருந்துவருந்த தேமுதிக, தற்போது திமுக கூட்டணியில் முதல்முறையாக இணைந்துள்ளது.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது திமுகவிற்கு பெரிய பலம் என கூறப்படும் நிலையில், கூட்டணி குறித்து எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்.
தேமுதிக உடனான கூட்டணி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் முதல்வர் முக ஸ்டாலின், “முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!
#DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!
#வெல்வோம்_ஒன்றாக!” என பதிவிட்டுள்ளார்.