தூய்மைப் பணியாளர் தொடர்பான உழைப்போர் உரிமை இயக்க வழக்கு முடித்து வைப்பு Pt web
தமிழ்நாடு

தூய்மைப் பணிகள் தனியார் மயம் தொடர்பான வழக்கு.. நீதிமன்றத்தில் முடித்து வைப்பு!

தூய்மை பணியாளர் பிரச்னையில் உழைப்போர் உரிமை இயக்கத்துக்கும், சென்னை மாநகராட்சிக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Premkumar S

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிராக உழைப்போர் உரிமை இயக்கம் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது. மாநகராட்சி, சுய உதவிக்குழுவின் 1,400 பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த ஒப்புக்கொண்டதுடன், தொழிலாளர் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள விவகாரங்களை அங்கேயே தொடர்ந்து நடத்த முடிவு செய்ததால் வழக்கு முடிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது, உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமாரசாமி, மேமோ ஒன்றை தாக்கல் செய்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி

அதில், சென்னை மாநகராட்சியின் ஐந்து மற்றும் ஆறாவது மண்டலங்களில் உள்ள சுய உதவிக்குழுவின் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் 1,400 பேரை நான்கு மற்றும் எட்டாவது மண்டலங்களில் மீண்டும் பணியமர்த்த பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள மூன்று விவகாரங்களை அங்கேயே தொடர்ந்து நடத்துவது என இரு தரப்பும் முடிவு செய்துள்ளதால், வழக்கை முடித்து வைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உழைப்போர் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டிருகின்றனர்.

முன்னதாக, தனியார் மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் முன் அமர்ந்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 13 நாள் தொடர் போராட்டத்திற்கு பிறகு, ஆகஸ்ட் 13ஆம் தேதி இரவு தமிழக காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி சார்பாக இலவச உணவு உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும், தூய்மைப் பணியாளர்களின் முக்கிய கோரிக்கையான தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு கொடுக்கக் கூடாது; மாநகராட்சி நிர்வாகமே எடுத்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றவில்லை.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள்

இந்த நிலையில்தான், தூய்மைப்பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 4 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தார்கள். ஏற்கனவே, தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த உழைப்போர் உரிமை இயக்கம், தூய்மைப்பணிகளை தனியார்மய மாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதற்கான வழக்கு விசாரணையும் ஒருபக்கம் நடைபெற்று வந்தது.

இந்த சூழலில் தான், சென்னை அம்பத்தூரில் தூய்மைப் பணியாளர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 57 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சியில் கீழ் பணியமர்த்தப்படுவார்கள் என்ற அறிவிப்பை வெளிட்டார். இதையடுத்து, தூய்மைப்பணியாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தான், தூய்மைப் பணிகளை தனியார்மயப் படுத்துவதற்கு எதிராக தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்த நிலையில், உழைப்போர் உரிமை இயக்கத்துக்கும் சென்னை மாநகராட்சிக்கும் ஏற்பட்ட உடன்பாட்டையடுத்து உயர் நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்திருக்கிறது.