செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த கண்ணாரம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ் - விஜயலெட்சுமி தம்பதியினர். இவர்களது மகன் ஆகாஷ் (19), விழுப்புரம் மாவட்டம் அறிஞர் அண்ணா ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதே போல் கண்ணாரபட்டு பகுதியில் ஆகாஷ் வீடு உள்ள அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேலு - அஞ்சலை தம்பதியரின் மகள் அபிநயா (19). இவரும் அதே கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், ஆகாஷூம் - அபிநயாவும் காதலித்து வந்துள்ளனர். கடந்த வாரம் இருவரும் சென்னை பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரில் கணவன் மனைவி எனக் கூறி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர். இதையடுத்து நேற்று இரவு பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜன்னல் வழியாக பார்த்த போது, ஆகாஷ் தூக்கில் தொங்கியபடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்த ஐசிஎப் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது ஆகாஷ் தூக்கில் தொங்கி நிலையிலும், அபிநயா கண் மற்றும் வாயில் ரத்த காயங்களுடன் வாயில் நுரை தள்ளியவாறு சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து இரு உடலையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த சில ஆண்டுகளாக ஆகாஷ் - அபிநயா இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த வாரம் காதலர்கள் இருவரும் தங்களது பெற்றோரிடம் கல்லூரி விடுமுறை என்பதால் சென்னையில் வேலைக்குச் செல்வதாகக் கூறி விட்டு சென்னை வந்ததும் தெரியவந்துள்ளது. பின்னர், இருவரும் கணவன் மனைவி எனக் கூறி வீடு வாடகை எடுத்து தங்கியதும் தெரியவந்ததுள்ளது.
இந்த நிலையில், நேற்று காலை காதல் ஜோடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ஆகாஷ் அபிநயாவை அடித்துக் கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஆகாஷ் தூக்கில் தொங்கிபடி இருந்ததைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் விசாரணையில் தெரியவந்தது.
அபிநயாவின் தாய் அஞ்சலை நமக்கு அளித்த பேட்டியில், தனது மகள் அபிநயா வேலைக்குச் செல்வதாகக் கூறி 20 நாட்களுக்கு முன்பு சென்னை வந்ததாக தெரிவித்தார். மேலும், அவர் தனியாக வேலைக்கு வருவதாக தான் தாங்கள் நினைத்து இருந்ததாகவும், ஆனால் எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற பையன் சென்னை வந்ததும் இருவரும் வீடு எடுத்து தங்கியதும் தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்தார். தங்களின் மகளை ஆகாஷ் அடித்துக் கொலை செய்துவிட்டு பயத்தில் அவரும் தற்கொலை செய்து கொண்டதாக அஞ்சலை தெரிவித்துள்ளார்.