- பிரேம்குமார் சீ
சென்னையில் ரிப்பன் மாளிகையின் முன்பு துய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ’மாநகராட்சியில் குடியேறும் போராட்டம்’ எனவும் பெயர் வைத்துள்ளனர். 8 ஆவது நாளைக் கடந்து இன்று 9 நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், தூய்மை பணியாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் என்ன? அரசு தரப்பினரால் கொடுப்பட்டுள்ள விளக்கங்கள் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ராயபுரம் மற்றும் திரு.வி.க நகர் போன்ற பகுதிகளின் தூய்மை பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன. அதேவேளையில், தண்டையார்பேட்டை, அண்ணா நகர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருவதாக தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில்தான், தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து 9ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. அதில், 10 மண்டலங்கள் கடந்த 2020ம் ஆண்டே தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன. 2021 ஆம் ஆண்டு 7-வது மண்டலம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டபோது அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைக்க நீதிமன்றத்தில் தடை வாங்கியிருந்த பிறகும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அம்மண்டலங்களை தனியார் வசம் ஒப்படைப்பதிருப்பதே போராட்டத்திற்கான முக்கிய காரணி.
தூய்மை பணியாளர் மண்டலங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், திமுக தனது தேர்தல் அறிக்கையில், ‘தூய்மை பணியாளர்களில் 10 வருடத்திற்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யபடும்’ எனக்கு கூறி ஐந்தாண்டு ஆட்சியே முடிவடையும் தருவாயில் இன்னும் பணிநிரந்தரம் செயல்படுத்தவில்லை; எனவே தேர்தல் அறிக்கையில் திமுக கூறியதை நிறைவேற்ற வேண்டும் என தூய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களையும் தனியாருக்கு மாற்றும் முயற்சி நடந்து வருகிறது என்றும் தூய்மை பணியாளர்கள் யாரும் நிரந்தர பணியாளர்கள் இல்லை என்றும் கூறுகின்றனர். எனவே, எங்களை மாநகராட்சியின் நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் எனக் கோரி தூய்மைபணியாளர்கள் 9 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தூய்மை பணியாளர்கள் 9வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்து காவல்துறை கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போராட்டத்தை தொடர்வது பொதுஅமைதி மற்றும் பாதுகாப்பிற்கும், பொதுமக்கள் நடமாட்டத்திற்கும் இடையூறு விளைவிப்பதாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. எனவே, போராடும் இடத்தில் இருந்து தாங்களாகவே கலைந்து செல்ல வேண்டும் என்றும், உத்தரவை மீறினால் எந்தவொரு நபர் மீதும் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு, காவல் ஆணையர் உத்தரவின்படி சென்னை நகருக்கு வெளியில் உள்ள ஒரு இடத்திற்கு காவல் பாதுகாப்பில் கொண்டு செல்லப்படலாம் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
அரசு தரப்பில் மேயர் பிரியா மற்றும் அமைச்சர் சேகர் பாபுவின் பதில்,
போராட்டக்குழுவினரிடன் அமைச்சர் சேகர்பாபு நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
முன்னதாக செய்தியாளரை சந்தித்த மேயர் பிரியா கூறியதாவது, ”ஏற்கெனவே 10 இடங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தனியாரிடம் ஒப்படைப்பதால் யாருக்கும் பணிநீக்கம் என்பது நடைபெறாது. மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தர பணி பாதுகாப்பு வழங்கப்படும். போரட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் இடங்களில் வேறு யாரையும் போடவில்லை அவர்களே வந்து சேருவார்கள் என்று தான் காத்திருக்கிறோம். மேலும் சம்பள விவகாரத்தை பொறுத்தவரை முன்பு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டதோ அதே அளவு சம்பளம் கொடுக்கப்படும் குறைக்கப்படாது . தூய்மை பணியாளர்கள் மீண்டும் பணியில் வந்து சேருமாறு கேட்டுக்கொண்டார்.
தூய்மைபணியாளர்களுடனான முதல்கட்ட பேச்சு வார்த்தையை முடித்து விட்டு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது,
நாங்கள் ஒன்றும் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுக்கவில்லை என்று கூறினார். அப்போது நீலம் ஊடகத்தை சேர்ந்த செய்தியாளர் நீங்கள் பணிநிரந்தரம் தருவதாக தேர்தல் அறிக்கையில் கூறி இருக்கிறீர்கள் என்று கூறிய போது, யார் கொடுத்தது? நீங்கள் எந்த பத்திரிக்கை என்று கேட்டார். அதற்கு பத்திரிக்கையாளர் நீலம் என்று கூறியதற்கு “ நான் பத்திரிக்கையாளர்களை மட்டும் தான் சந்திக்கிறேன் உங்களை சந்திக்கவில்லை என்று கூறினார். மேலும் அந்த கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.
மேலும், அமைச்சர் சேகர்பாபு வின் மீது அதிருப்தியடைந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைபணியாளர்கள் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் அமைச்சர் சேகர்பாபுவிடம் பேச விருப்பம் இல்லை எனவும் அதிகாரிகளுடன் பேசவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பொது மக்களின் பொது சுகாதார நலன் கருதி நாங்கள் எங்களுடைய பணி நிரந்தரம் அவுட்சோர்சிங் தொடர்பான பிரதான கோரிக்கையை நீதிமன்றத்தின் முடிவிற்கு விட்டுவிட்டு 31/7/2025 அன்று என்ன பணி நிலையில் பணி செய்தோமோ அதே பணி நிலையில் பணி அளித்தால் உடனே பணிக்கு திரும்ப வர தயாராக இருப்பதாக கடிதம் கொடுத்துள்ளோம். அதே வேளையில், தாங்கள் பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை என்றாலும் பொதுமக்களின் நலன் கருதி 5 மற்றும் 6 மண்டலங்களில் உள்ள குப்பைகளை வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் 500 தூய்மை பணியாளர்களுடன் குப்பைகளை அகற்ற உள்ளோம். போராட்டத்தை தொடர்ந்து கொண்டே இந்த பணியை மேற்கொள்ள உள்ளோம்.
மேலும், இதற்கு அரசாங்கம் சம்பளம் தரவில்லை என்றாலும் பரவாயில்லை. எங்களுக்கு பொதுமக்கள் மீதும் அக்கறை உள்ளது. அதன் அடிப்படையில் தான் பிரதான கோரிக்கையை நீதிமன்றத்தின் இடையே விட்டுவிட்டு பணியில் எந்த நிபந்தனையும் இல்லாமல் 31/7/2025 அன்று என்ன பணி நிலைமையில் மாநகராட்சியில் பணி செய்தோமோ அதே பணி நிலைமையை மாநகராட்சி ஊழியராக பணியில் சேர தயாராக உள்ளோம்.
தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நிரந்தரம் இல்லையேல் சுதந்திரம் இல்லை என்ற வாதத்தை முன்னிறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். மேலும் இதில் பல்வேறு மாணவர்களும் இணைந்து எங்களோடு போராட போகிறார்கள் என்று போராட்டக் குழு சார்பில் தெரிவித்தனர்.
தூய்மைபணியாளர்களுக்கு ஆதரவு
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைபணியாளர்களுக்கு அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள், கல்லூரி மாணவர்கள் என பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கைகளாக உள்ளது. தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.