தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் நெல்மணிகள் ஈரமாகிய நிலையில், முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு நெல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த கோரியிருந்தார். ஆனால், மத்திய அரசு இந்த கோரிக்கையை நிராகரித்ததைத் தொடர்ந்து, திருவாரூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகப்படியான நெல்மணிகள் ஈரமாகியிருந்தன. இந்நிலையில், விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக அதிகரிக்கக் கோரி முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. இந்நிலையில்தான் நெல் ஈரப்பதின் அளவை 22 சதவீதமாக உயர்த்தி வழங்காத மத்திய அரசை கண்டித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின. உடனே, "சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை?" என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவரான மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள்.
நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். ஆனால், அந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட உழவர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என திரு. பழனிசாமி அவர்கள் காத்திருக்கிறார்? கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும். சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று திரு. பழனிசாமி நினைக்கிறாரா?
மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்த திரு. பழனிசாமி , ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி நமது உழவர்களின் கோரிக்கைகளைக் கேட்கச் சொல்லியாவது சொல்வாரா? உழவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்கிறேன். இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது!” எனத் தெரிவித்துள்ளார்.
நெல் ஈரப்பத அளவினை உயர்த்தி வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக மாவட்ட செயலாளரும், எம். எல்.ஏ-வுமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக கூட்டணி கட்சி மாவட்ட தலைவர்கள் உட்பட 500கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.