பட்டியல் சமூக வாக்குகளை கவரும் பாஜகவின் திட்டம்  pt web
தமிழ்நாடு

பாஜகவின் பீகார் Formula | பட்டியல் சமூக மக்களுக்காக விரிவான கூட்டணி! NDA திட்டம் கைகொடுக்குமா?

பீகார் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, தமிழகத்துக்கான தேர்தல் வியூகத்திலும் பட்டியல் சமூக மக்களின் வாக்குகளை கைப்பற்றும் வகையில் கட்சிகளை ஒருங்கிணைக்க பாஜக முயற்சிக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்த சிறப்புச் செய்தியைப் பார்ப்போம்.

PT WEB

பீகாரில் பாஜக கூட்டணி பட்டியலின சமூகங்களை ஒருங்கிணைத்து வெற்றி பெற்றது. இதே உத்தியை தமிழகத்தில் பயன்படுத்தி, பட்டியலின சமூக ஓட்டுகளை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சிக்கிறது. விசிக நீங்கலாக மற்ற கட்சிகளை இணைத்து, தமிழகத்தில் பாஜக தனது செல்வாக்கை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

பீகாரில் நிதிஷ் தலைமையிலான பாஜக கூட்டணியின் வெற்றியில் தனி தொகுதிகளில் கிடைத்த வெற்றி முக்கியப் பங்கை வகித்துள்ளது. பீகாரின் 243 தொகுதிகளில் 38 தொகுதிகள் தனித்தொகுதிகளாக இருக்கின்றன. இவற்றில் 34 தொகுதிகளை வென்றுள்ளது பாஜக கூட்டணி. பீகார் மக்கள்தொகையில் 18% அளவுக்கு பட்டியலின சமூகத்தினர் இருக்கின்றனர். தமிழ்நாட்டிலும் அவ்வாறே 20% அளவுக்குப் பட்டியலின சமூகத்தினர் இருக்கின்றனர். பீகாரில் பட்டியலின வரையறைக்குள் பல சமூகப் பிரிவுகள் உள்ளது போன்றே தமிழகத்திலும் பட்டியலின வரையறைக்குள் பல சமூகப் பிரிவுகள் உள்ளனர். பீகாரில் வெவ்வேறு சமூகங்களையும் ஒரு குடைக்குள் கொண்டுவந்தது பாஜக. தமிழகத்திலும் அதே உத்தியைக் கையாள அது முற்படும் என்று தெரிகிறது.

கிருஷ்ணசாமி, பொற்கொடி ஆம்ஸ்ட்ராக், ஜான் பாண்டியன்

தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில், பட்டியலின வரையறைக்குள் வரும் சமூகங்கள் இடையே செல்வாக்கு மிக்க கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கெனவே, திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறது. தவிர, அடிப்படையிலேயே பாஜக எதிர் சித்தாந்தத்தைக் கொண்டவர் விசிக தலைவர் திருமாவளவன் என்பதால், அக்கட்சியைத் தாண்டி உள்ள ஏனைய கட்சிகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தை பாஜக யோசிக்கிறது. வட தமிழகத்தில் விசிக செல்வாக்கு செலுத்தும் சமூக வட்டத்திலேயே செயல்படும் ஏனைய கட்சிகள் என்ற அளவில், மறைந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆரம்பித்துள்ள தமிழ் மாநில பகுஜன் சமாஜ், ஏற்கெனவே கூட்டணியில் இருந்த கட்சிகளான செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசுக் கட்சி, பூவை ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

விசிக நீங்கலாக ஏனைய எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைப்பதன் வாயிலாக தமிழகத்தில் பட்டியலின சமூக ஓட்டுகளில் கணிசமான பகுதியை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவர முடியும் என்று நம்புகிறது.

அதேபோன்று, தென் தமிழகத்தில் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளும் பாஜக கூட்டணிக்குள் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது. தமிழ்நாட்டில் பாரம்பரியமாக பட்டியலின மக்கள் இடையே அதிமுக-வுக்கு என்று தனி ஓட்டு வங்கி உள்ளது. இது தவிர, கடந்த காலங்களில் இந்திய குடியரசு கட்சி போன்ற கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணியுறவைப் பராமரித்து வந்திருக்கிறது அதிமுக. விசிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கூட்டணியில் வைத்திருந்திருக்கிறது.

தமிழ்நாடு தனித்தொகுதி பட்டியல்

பாஜகவைப் பொறுத்த அளவில் மேற்கு தமிழகத்தில் பட்டியலினத்தோர் மத்தியில் அதற்கென்று தனி வாக்கு வங்கி உள்ளது. இப்போது விசிக நீங்கலாக ஏனைய எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைப்பதன் வாயிலாக தமிழகத்தில் பட்டியலின சமூக ஓட்டுகளில் கணிசமான பகுதியை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவர முடியும் என்று நம்புகிறது பாஜக.

தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், அவற்றில் பட்டியலினத்தோருக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 44 என்பதும், தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற இந்தத் தொகுதிகள் முக்கியமானவை என்பதும் 2021 சட்டமன்றத் தேர்தலில் 63% இடங்களை திமுக கூட்டணியே கைப்பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்!